மூன்று வாரங்களில் மூன்று தேசங்கள்...


முன்னேற்பாடுகள்
மேற்படிப்பு(?!?!) முடித்துப் பட்டமேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு முதல், மூன்று வார காலத்திற்கு ஒரு நாடோடி வாழ்க்கை வாழலாம் என்று முடிவு எடுத்து, எந்த செல்லுலோயிடுகளிலும் பதிவு செய்யப்படாத "மலேசியாவும் மனித உரிமைகளும்' என்ற என்னுடைய திரைப்படத்தின் இன்னொரு அத்தியாயத்திற்கு சுபம் வைத்துவிட்டு விமானம் ஏறிய போது நேரம் காலை 6.30.

விமானநிலையப் பேருந்து தரிப்பிடத்தில் என்னை இறக்கிவிட்டு பிரியாவிடை பெற்றுச்சென்ற நண்பனுடன் என்னை மலேசியாவுடன் இணைத்திருந்த தொப்புள்கொடியின் கடைசி இழையமும் அறுந்து போனது. இறக்கமுடியாத சுமையாக என்னைத்தொடர்ந்த பயணப்பொதியையும் மனதையும் சுமந்துகொண்டு சரியான பேருந்து தேடிப்பிடித்து வசதியான ஆசனத்தில் அமர்ந்தபோது இதயத்தின் எடை ஏறி  இருந்தது. பிரியாவிடைகள் ஒன்றும் புதிதில்லை என்ற போதும் ஒவ்வொருமுறை பிரியாவிடை பெறும்போதும் மனதின் எதோ ஒரு மூலையில் வலிக்கத்தான் செய்கிறது.

கடந்து வந்தவைகளையும்  இனிக் கடக்கப்போவனவற்றையும் கணக்குப்போட்டபடி பேருந்துடன் கூடவே பயணித்த மனதில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி. ஒரு மணி நேரப் பயணத்தின் முடிவில் விமானநிலையமடைந்த  பேருந்து, காதலியின் பெற்றோர் அறியாமல் வாயிலிலேயே பிரியாவிடை பெறும்  காதலனைப்போல, என்னையும் இதர பிரயாணிகளையும் சற்றுத் தொலைவிலேயே இறக்கிவிட, குட்டும்போதேல்லாம் குனிந்து பழகிவிட்ட என்னைப்போன்ற சக "எதற்கு வம்பு?" ஜீவராசிகளுடன் சேர்ந்து நடந்து விமானநிலையத்தினுள் நுழைந்த போது நேரம் நள்ளிரவினை அண்மித்திருந்தது.

விமான நிலையத்தின் ஒரு மூலையில் அமர்ந்து மடிக்கணணி திறந்து மீதமிருந்த ஒரே ஒரு அறிக்கையையும் எழுதி முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டு, விமான நிலைய சம்பிரதாயங்களை ஆரம்பிக்க எண்ணி நகர்ந்த போது நேரம் அதிகாலை 5 மணியினை எட்டியிருந்தது. மூன்று முறை கால நீடிப்பு செய்யப்பட்டிருந்த என்னுடைய visa, குடிபெயர்வு அதிகாரியினை என்னைச் சற்று சந்தேகமாகப் பார்க்க வைத்தது. அவரின் சந்தேகத்தினைப் போக்கி சம்பிரதாயங்கள் முடித்து விமானம் ஏறி உட்கார்ந்த போது வானக் கூந்தல் நரைக்க ஆரம்பித்திருந்தது.

வியட்னாம் (Vietnam)
ஐப்பசி ஓராம் திகதி காலை 8.30 மணி அளவில் உலோகப்பறவை அமெரிக்கர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்த மண்ணில் இறங்கியதிலிருந்து உத்தியோகஸ்தர்கள் முன்னால் என்னை ஆஜர்படுத்தியது  வரைக்கும் எல்லாம் சாதாரணமாக நடந்தது. ஏறத்தாள 9 வருடங்களுக்கு முன்னால் எடுத்த என்னுடைய கடவுச்சீட்டு புகைப்படத்தினைப் பார்த்தால் எனக்கே என்னை அடையாளம் தெரியாது என்ற நிலையில் அந்நியர்  ஒருவரிடம் அதை எதிர்பார்ப்பது அவ்வளவு புத்திசாலித்தனமான செயலில்லை என்றாலும் எனக்கு வேறு வழி இருக்கவில்லை.

          என்னையும் என் கடவுச்சீட்டு புகைப்படத்தியும் சுமார் பத்து நிமிட நேரமாக மாறி மாறி உற்றுப்பார்த்தும் திருப்தி அடையாத அந்த உத்தியோகஸ்தர் தன்னுடைய சக உத்தியோகஸ்தரை அழைத்து சந்தேகம் தீர்த்து என்னை செல்ல அனுமதித்த போது  இலங்கைத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைத்த உணர்வு எனக்கு. அந்த உணர்வுடனேயே மீதிக்கடமைகளையும் முடித்து வெளியே வந்து  நூற்றுக்கணக்கான Folders களில் தொலைந்த முன்னாள் காதலியின் புகைப்படங்கள் போல (திருவிழாக்கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல என்று சொல்வதெல்லாம் என்னுடைய அம்மா காலத்துடன் முடிவடைந்ததனால்) திக்குத்திசை தெரியாமல் பேந்தப்பேந்த முழித்து கடைசியில் சுதாரித்து வாடகைக்கார் பிடித்து தங்குமிடம் வந்தடைந்தேன்.

          தூக்கமின்றிய இரவு என்னை அநியாயத்துக்கு மிரட்டிப்பணிய வைத்து என்னை மூச்சுவிடும் பிணமாகத் தூங்கவைத்தது. விமான நிலையத்தில்  வாங்கிய உள்ளூர்த்தொலைபேசி இலக்கத்தினை Hanoi இல் வசித்து வந்த நண்பர்களுக்கு அறிவித்து விட்டு அவர்களின் அழைப்புகளுக்கு காத்திருந்த போது  மாலையில் வந்து அழைத்து செல்வதாகக் கூறிய நண்பனின் Facebook தகவல் மனதுக்கு இதமாக இருந்தது.

          குளித்துத் தயாராகவும் வாயிலில் காத்திருப்பதாக நண்பன் அறிவிக்கவும் நேரம் சரியாக இருந்தது. நண்பன் செலுத்தி வந்த சிறிய மோட்டார்சைக்கிள் மீது சரியாக 15 மாதங்களுக்கு முன்னர் என்னை விட்டுப்பிரிந்த என்னுடைய மோட்டார்சைக்கிளின் நினைவு ஏற்படுத்திய  வருத்தத்தை மறைத்துக்கொண்டு ஏறி அமர்ந்து வீதி உலா வந்த போது  விழித்திருந்த கண்களுடன் மீதிப்புலன்களும் இணைந்துகொண்டன. சிற்றுலா முடித்துக்கொண்டு 'நீராகாரம்' அருந்தவும் Shisha புகைக்கவும் பொருத்தமான இடம் தேடி அடைந்தோம். நீராகாரம் மற்றும் shisha வுடன் பழங்கதைகளையும் பகிர்ந்துக்கொண்டு மற்றைய சினேகிதிக்கு அழைப்பு ஏற்படுத்தி அவரையும் அழைத்துக்கொண்டு இன்னொரு விடுதி புகுந்து பாதியில் விட்ட பழங்கதைகளைத் தொடர்ந்த போது காலச்சக்கரம் நின்று போனது எமக்கு. நள்ளிரவு 12 மணிக்கு காவல்துறை (இந்திய காவல்துறை மட்டும் தான்  மக்களின் நண்பன் போல) எம்முடைய களிப்பு நிமிடங்களுக்கு 'மங்கலம்' பாடும் வரைக்கும் தொடர்ந்தது எம்முடைய அளவளாவல்.

          சிநேகிதியை அவளது வீட்டில் விட்டு நண்பனுடன் எனது தங்குமிடம் அடைந்து குளித்துவிட்டு தூங்கியதுடன் முடிந்தது வியட்னாமில் என்னுடைய முதலாவது நாள். மறுநாள் நடராஜா service இல் நகர்வலம் வந்ததைத் தவிர வேறு எதுவும் விசேஷமாக இல்லை. மதியம் விடுதி திரும்பி Lao PDR நோக்கிய என்னுடைய 20 மணி நேரப் பிரயாணத்துக்கான பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொண்டு சற்றே இளைப்பாறிய போது மனமும் தன்னைச் சற்று ஆசுவாசிப்படுத்திக்கொண்டது.

லாவோ (Lao PDR)
          ஏதோ மணிக்கூட்டிற்கு பிறந்தவர்கள்  போல 'சரியாக மாலை 5 மணிக்கு எல்லாம் தயாராக இருங்கள், பேருந்து வரும்' என்று கட்டளை  இட்டார்கள். 5 மணிக்கு பேருந்து வரவில்லை மாறாக ஒரு Motor Cycle வந்தது. அவரைக் கால்நடையாகத்  தொடரச் சொல்லிவிட்டு மெதுவாக நகர ஆரம்பித்ததும் எங்கே செல்கிறோம் என்ற எந்த வித அறிவுமின்றி அவரைத்தொடர்ந்து நடந்து ஒரு Travel Agent Office இணை அடைந்து சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த போது Mini-Van ஒன்று எங்களை (என்னுடன் இன்னும் மூவர் நான் தங்கியிருந்த விடுதியில் இருந்து அந்தப் பயணத்தில் இணைந்துகொண்டார்கள்) அழைத்துச் செல்ல வந்தது.

          ஏறி இருந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு மத்திய பேருந்து நிலையத்தினை அடைந்து பற்றுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு பேருந்தின் அருகில் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பின்னர் எமக்கான உறங்கலிருக்கைகளில் அனுமதித்தார்கள். கூட வந்தவர்களின் முறைப்பாடுகளைக் காதில்கூட வாங்காது தங்கள் 'கடமைகளினை' முடித்துக்கொண்டு வாகனத்தினை செலுத்த ஆரம்பித்த போது  நேரம் மாலை 8.30 மணியினைத் தாண்டியிருந்தது. இதுவரை அவ்வாறான ஒரு பேருந்தில் பயணம் செய்த அனுபவம் எனக்கு இருக்கவில்லை. இருந்தாலும் பேருந்தினுள் ஒலித்த காதுக்கு இரைச்சலான இசை அதனை அனுபவிக்க இடமளிக்காது இம்சை கொடுத்தது. தொடர்ச்சியான முறைப்பாடுகளின் பின்னர் ஓட்டுனர் 'மனமிரங்கி' volume level இனை ஒரு (1) level இனால் குறைத்தார்.

          சகிக்க முடியாத இசையுடன் சமரசம் செய்ய முயன்று தோற்ற களைப்பில் கண்ணயர்ந்ததற்கு அந்த இரைச்சல் மட்டுமே சாட்சி. ஏறத்தாள 10 மணி நேரப்பயணத்தின் பின்னர் நாம் பயணம் செய்த பேருந்து Vietnam-Lao PDR எல்லையினை அடைந்தது. எல்லையில் குடிபெயர்வு உத்தியோகஸ்தர்கள் கடமையினை ஆரப்பிக்கும் வரைக்கும் காத்திருந்த நேரத்தில் அருந்திய கோப்பி தன்னுடைய கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்பதனை நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும். பின்னர், பூர்வாங்கக்கடமைகள் முடித்து எல்லை கடந்து Lao இனுள் நுழைந்து தூரத்தில் காத்திருந்த பேருந்தினை நோக்கி நடந்த போது ஓமந்தை, முகமாலை சோதனைச்சாவடிகளின் நினைவு மின்னலென வந்துபோயிற்று.

          வேதனையினால் எடையேறிய மனதினை பெருமூச்சினால் தேற்றிக்கொண்டு மீண்டும் பேருந்தில் ஏறிப் பயணத்தினை தொடர்ந்து ஒருவழியாக Lao இன் தலைநகரான Vientiane இனை  அடைந்தபோது நேரம் மாலை 4 மணி ஆகி இருந்தது. நகர மத்தியில் பேருந்து எம்மை இறக்கிவிட்டதும் Vientiane இல் Internship செய்துகொண்டிருந்த என்னுடைய கம்போடிய (Cambodian) நண்பனுடன்  தொடர்பு கொண்டு பேசியபோது தன்னுடைய அலுவலக முகவரி கூறி அங்கு வரும்படி  சொன்னான். அந்த இடம் அருகிலேயே இருந்ததனால் நடந்து செல்ல முடிவெடுத்து உள்ளூர்க்காரர் ஒருவரிடம் வாயில் நுழையாத பெயர் சொல்லி வழி  விசாரிக்க எத்தனித்த போது  அந்த நல்ல மனிதர் தன்னுடைய கைத்தொலைபேசியிலேயே என் நண்பனுடன் மீண்டும் தொடர்புகொண்டு சரியான விலாசம் பெற்று குறித்த இடத்தில் என்னை விட்டுச் சென்றார்.

          அலுவலக வாயிலிலேயே காத்திருந்த நண்பனை நலம் விசாரித்து நண்பன் ஒழுங்கு செய்த Tuk Tuk இல் அவனுடைய வீட்டினை அடைந்த போது  ஏற்கனவே எனக்கு அறிமுகமாகி இருந்த அவனுடைய மனைவி அவர்களுடைய 15 மாதக்குழந்தையுடன் என்னை வரவேற்றார். சுகநலம் விசாரித்து முடித்து எனக்கென அவர்கள் ஒழுங்கு செய்து வைத்திருந்த அறையினுள் தஞ்சம் புகுந்த போது என் உடம்பின் ஒவ்வொரு அணுவும் ஓய்வெடுக்கச்சொல்லிக் கெஞ்சியது. கெஞ்சலைப் புறக்கணித்து விட்டுக் குளியலறை புகுந்து வெளியேறிய போது ஒவ்வொரு Cell உம் பூப்பூத்திருந்தது.

          அதன் பின்னர் நண்பனின் மனைவி மற்றும் குழந்தையுடன் இரவு உணவுக்கு வெளியே சென்று வயிறு நிறைய உணவும் மனது நிறைய சுவாரசியமான உரையாடலும் என்று சில மணித்துளிகளைக் கொலை செய்து விட்டு Lao இனைத் Thailand இலிருந்து பிரிக்கும் ஆற்றின் கரையோரம், தூரத்தில் தெரிந்த Thailand இனைப் பார்த்த வண்ணமே நடந்துவிட்டு மனையடைந்த போது என்னுடன் சேர்ந்து பயணம் செய்த இஸ்ரேலிய நண்பியின் மின்னஞ்சல் என்னையும் நண்பனையும் மீண்டும் சோமபானம் அருந்த அழைத்தது. நண்பனின் முகத்தில் தெரிந்த சம்மதப் புன்முறுவலினைக் கண்டதும் மீண்டும் தயாராகி அவர் சொன்ன இடத்தினை அடைந்து குருதியில் சிறிதளவு போதையினைக் கலந்து விட்டு விடைபெற்று தூங்கச்சென்றது வரைக்கும் தான் அன்றைய நாள் பற்றி இதனை எழுதும் வரைக்கும் நினைவிருக்கிறது.
          மறுநாள் காலையில் அலுவலகம் சென்ற நண்பனுக்கு பிரியாவிடை சொல்லிவிட்டு ஊரைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டபோது நேரம் காலை 8.30 மணி இருக்கும். ஊர் மேய்ந்துவிட்டு (நான் நேரத்துக்கு வீடு செல்லத் தவறும் போது  என்னுடைய அம்மா என்னை இப்படித் தான் திட்டுவது வழக்கம்) வீடடைந்து Vang Vieng செல்லத்தயாராகி நண்பனின் மனைவியிடம் நன்றிசொல்லித்  தெருமுனையில் அரை மணி நேரம் காத்திருந்த பின்னர் ஏற்கனவே ஒழுங்கு செய்து வைத்திருந்த வாகனம் வந்தது.

          செம்மண் புளுதியாலும் சரளைக்கற்களாலும் நிறைந்திருந்த பாதையில் 4 மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணம் செய்த பின்னர் மலை முகடுகளின் இடையில் அமைந்திருந்த அந்த அமைதியான, அழகான கிராமத்தினை வந்தடைந்தோம். பசுமை போத்தியிருந்த அந்தப் பூமி கொண்ட காற்று சுவாசப்பையின் ஒவ்வொரு கலத்தையும்  சுத்தம் செய்து சென்றது. திசை தெரியாது ஓடிக்கொண்டிருக்கும் எம்முடைய இயந்திர வாழ்க்கையினை மறக்க நினைக்கும் ஒவ்வொருவரும் செல்லவேண்டிய இடம் அது. இருந்தாலும், எனக்கு கிடைத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட காலத்தினை சரியான முறையில் உபயோகித்துக்கொள்ள வேண்டி இருந்ததனால் மறுநாளே Luang Prabang செல்லவேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. அதற்கான ஒழுங்குகளினை செய்துவிட்டு சற்று அங்கும் இங்கும் நடந்து ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு Guest House திரும்பியதுடன் முடிந்தது அன்றைய நாள்.

          காலையில் சற்றுத் தாமதமாகவே கண்விழித்ததனால் 3 மணிக்கு Luang Prabang நோக்கி பயணப்படத் தயாராக இருந்த வாகனத்தினை அடைவதற்கு முன்னை குறிப்பிடும்படியாக எதுவும் செய்ய முடியவில்லை. 6 மணிப் பயணம் என்று சொல்லி ஆரம்பித்த அந்தப்பயணம் இடைவிடாது பெய்துகொண்டிருந்த மழையினால் சற்று அளவுக்கதிகமாகவே தாமதமடைந்தது. அது போதாதென்று சீர் செய்யப்படாமலிருந்த  பாதையின் பள்ளத்தில் வாகனம் விழுந்ததினால் வாகனம் விட்டுக் கழன்று த(னி)ன் வழியே சென்ற உதிரிச்சில்லினைத் தேடுவதில் 1 மணி நேரம் கடலிலே விழுந்த மழைத்துளியாகக் காணாமற்போயிற்று.

ஒருவழியாக நத்தை வேகத்தில் Luang Prabang வந்தடைந்த போது  மொத்த ஊரும் உறங்கிபோயிருந்தது. மூடிக்கிடந்த விடுதிக் கதவில் மோதிர விரலால் குட்டியதில் விடுதிக்காப்பாளருடன்  மின்விளக்குகளும் விழித்துக்கொண்டன. இந்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் அளவுக்குத் திட்டமிட்டு நான் மேற்கொண்டு வருகின்ற இந்த சுற்றுபயணத்திற்கு  சற்றும் பொருத்தமில்லாத வகையில் அந்த விடுதியின் வாடகை அமைந்திருந்தாலும் அந்த நேரத்தில் வேறு வழி இருக்காததினால் கேட்ட பணத்தினைக் கொடுத்துவிட்டு உறங்கச்சென்ற போது  நேரம் நள்ளிரவு கடந்திருந்தது.

          UNESCO வினால் Heritage City என அந்தஸ்துக்கொடுக்கப்படிருந்த அந்த அழகிய நகரத்தினை அங்குலம் விடாமல் அலச வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாலையிலேயே கண்விளித்து நடைப்பயணமாக ஊர்வலம் வந்து என் கண்களுக்கு களிப்பூட்டியவற்றை எல்லாம் புகைப்படக்கருவியில் பதிவு செய்துகொண்டே நடந்ததில் காலைச்சாப்பாடு மறந்து போயிற்று எனக்கு. களைத்துபோனதினால் விடுதி திரும்பிய போது  கடந்த இரவு என்னுடன் கூடப்பயணித்த அமெரிக்க நண்பன் குறைவான வாடகையில் தான் கண்டு பிடித்த இன்னொரு விடுதி பற்றிக்கூறியதும் அப்போது தங்கி இருந்த விடுதியினை Check-out பண்ணிக்கொண்டு புதிய விடுதி நோக்கி இருவரும் நடந்தோம்.

          புதிய விடுதியில் அவசராவசரமாகச் check-in செய்து விட்டு Kuang Si நீர்வீழ்ச்சியினை கண்டுகளிப்பதற்காக ஏற்பாடு செய்துவைத்திருந்த இடத்தினை அடைந்தேன். என்னையும் இன்னும் மூன்று சுற்றுலாப்பயணிணகளையும் தன்னுள் அடக்கிக்கொண்டு அந்த mini-van சரியாகக்  காலை 11.45 மணிக்கு அந்தத்  தண்ணீர்ச்சொர்க்கத்தினை நோக்கிப் புறப்பட்டது.

          தலைவகிடாக நீண்ட அந்தக்  குறுகிய பாதையில் நாம் பயணித்த mini-van சற்றே முனகிக்கொண்டு நகர்ந்து சென்ற அந்த mini-van. 45 நிமிடப் பயணத்தின் பின்னர் மூச்சு நிறுத்தி தற்காலிக உயிர்நிறுத்தம் செய்துகொண்டது.  சற்றுச்  சமதரையாக இருந்த அந்த இடத்திலிருந்து மெதுவாக மேலே ஏறிய  எங்களின் கண்களில் பட்டது அந்தக் கண்கொள்ளாக் காட்சி. என் தலை முடிக்குக் கூட புள்ளரிப்பு ஏற்பட்டதனை என்னால் உணர முடிந்தது. தண்ணீர் ஆடும் தாண்டவம் கண்டு மெய்மறந்து நின்ற என்னை தட்டித் தரைக்கு அழைத்தனர் என் கூட வந்த வயது முதிர்ந்த Irish தம்பதியினர். அவர்களை நுழைத்து  ஒரு புகைப்படத்தினை எடுத்துக்கொடுத்து மீண்டும் என் புலன்களைப் புதுப்பிக்கத்தொடங்கினேன். அந்த உப்புக் கரிக்காத / கலக்காத வெண்பஞ்சு நுரைகளைச் சுமந்து வந்த அருவியின் சாரலில் நனைந்த போது வாழ்க்கையின் தவறவிட்ட தருணங்கள் நெஞ்சில் வந்து மிரட்டிவிட்டுப் போயின.
          Tsunami யின் பின்னர் என் நெஞ்சில் தொற்றிக்கொண்ட தண்ணீரின் மீதான வெறுப்பு முதல் நொடியிலேயே ஜலசமாதி அடைந்ததனை உணர முடிந்தது. அத்தனை நீரையும், அழகையும் மொண்டு குடிக்க முடியாத என் இயலாமையை எண்ணி என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. உடைந்து தெறிக்கும் அந்த வெண்துளிகளின் ஸ்பரிசம் எனக்கு 30 வயதிலும் உணவூட்டி  விடும் என் தாயின் நேசத்தினை நினைவுபடுத்திச் சென்றது. நீர்வீழ்ச்சிகள் ஒன்றும் புதிதல்ல எனக்கு. இருந்தாலும் இத்தனை அழகான ஒரு நீர்வீழ்ச்சியினை இவ்வளவு அருகிலிருந்து பார்ப்பதற்கு எனக்குக்  கிடைத்த முதல் சந்தர்ப்பம் இது.
          உடல் நனைய உயிர் உருக இலயித்திருந்த போது, காலத்திற்கும், பணத்திற்கும் கூறு போட்டு விற்கப்பட்ட வாழ்க்கை என்னை நியத்திற்கு அழைத்து வந்து வீடு திரும்ப வேண்டியதனை நினைவுபடுத்தியது. முடிந்தமட்டும் வாழ்க்கைக்கு அர்த்தம் சொன்ன அத்தனை அழகையும், புகைப்படக்கருவியின் செயற்கை மூளையிலும் இன்னும் செல்லரிக்கப்படாமலிருக்கும் என்கூடப்பிறந்த இயற்கை  மூளையிலும்  சேகரித்துக் கொண்டு விடுமுறை முடிந்தும் வீடு நீங்க விரும்பாத குழந்தையாக தத்தளித்த மனதினை அடக்கிக்கொண்டு, காத்து நின்ற வாகனத்தில் ஏறியபோது "இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நிற்க முடியுமா?" என்று மனது அலைபாய்ந்தது.


          இன்னும் முழுதாக செரிக்காத நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு இருக்கும் போது விடுதி செல்லும் பாதையில் அமைந்திருந்த இன்னும் மண் மணம் மறக்காத ஒரு கிராமத்தில் வாகனம் நின்றது. "தக்கன பிழைக்கும், அல்லாதன அழியும்" என்பதனை நன்றாகப் புரிந்துகொண்டு மாறிக்கொண்டிருக்கும்  இன்றைகளுக்கும் மாற்ற / மாற விரும்பாத நேற்றைகளுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் ஒரு சமுதாயத்தினை அங்கு பார்த்தேன். விவசாயம் தவிர்த்து, தங்களினை ஒரு காட்சிப் பொருளாகப் பார்க்கும் உல்லாசப்பயணிகளுக்கு கைவினைப்பொருட்கள் செய்து விற்கும் ஒரு இன்னல் நிலையினை அங்கு தெளிவாக உணர முடிந்தது. என் சட்டைப்பையில் அந்நியசெலாவணியும் முதுகுப்பையில் மடிக்கணணியும் போகுமிடமெல்லாம் ஆமையாகச் சுமந்து செல்லும் நான் யார் அவர்களைக் குற்றம் சொல்ல அல்லது கோபித்துக்கொள்ள.
       
கூண்டில் அடைக்கப்படாமல் காட்சிப்பொருளாக இருந்த அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு விடுதியடைந்து சற்று ஓவ்வெடுத்துக்கொண்டிருக்கும் போது அமெரிக்க நண்பன் உற்சாக பானம் அருந்த அழைத்தான். சற்று நேரம் கழித்து சமபந்தி பானத்தில்  கலந்துகொள்வதாக  அவனுக்கு வாக்களித்துவிட்டு இணையத்தளத்தினுள் புகுந்து என் இருப்பினை உலகத்துக்குத் தெரியப்படுத்தினேன். மனதும் உயிரும் நிறைந்திருந்த எனக்கு அந்தத் தருணத்தில் உற்சாக பானம் மிகவும் ஏற்புடைய விடயமாகத் தெரிந்தது. நண்பன் சொன்ன வழிக்குறிப்புகளினை நினைவுபடுத்திக்கொண்டு குறித்த விடுதி அடிந்த போது  இன்னும் மூவருடன் உரையாடிக்கொண்டிருந்த நண்பன் கண்ணில் பட்டான். வணக்கம் சொல்லி புன்னகை பரிமாறி எனக்கான சோமபானம் கொணரச்சொல்லி அறிவித்துவிட்டு அவர்கள் தங்களுடைய கலந்துரையாடலினை விட்ட இடத்திலிருந்து தொடர நானும் இணைந்துகொண்டேன்.
          சுமார் 2 மணி நேரம் நீடித்த எம்முடைய கலந்துரையாடலினை முடித்துக்கொண்டு பணம் செலுத்தி வெளியேறிய போது இன்னொரு இரவுவிடுதிக்கு செல்லலாம் என்று ஒரு German நண்பன் சொன்ன கருத்தினை அனைவரும் ஆமோதித்ததனைத் தொடர்ந்து அனைவரும் Utopia Pub நோக்கி நகரத் தொடங்கினோம். இரவின் கருமையில் கலந்து போயிருந்த பாதைகளினை எதிரில் தென்பட்டவர்களின் உதவியுடன் உறுதி செய்து கொண்டு அவ்விடம் அடைந்து மீண்டும் "தேவைகள்" தெரிவித்து வசதியான ஒரு இடம் பார்த்து அமர்ந்தோம்.

          நிமிடங்கள் பல கரைந்து போன பின்னர் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த கரப்பந்தாட்டத்தில் இணைந்து கொள்ளும் யோசனையினை, சராசரியாகத் தான் விளையாடத்தெரியும் என்ற உண்மையினை மறைத்துக்கொண்டு கௌரவமாக மறுதலித்தது  தப்பு என்று அவர்கள் விளையாடுவதனை அவதானித்த சிறிது நேரத்தில் புரிந்துகொண்டது. மறந்துகூட அடுபடிப்பக்கம் போகாத நாகரிகப் பெண்களைப்போல கரப்பந்தினை அதற்கு முன்னால் தொட்டுப்பார்த்திராதவர்கள் கூட நம்பிக்கையுடன் விளையாடுவதனைக் கண்டதும் கையிலிருந்த குவளையினை ஓரமாக வைத்துவிட்டு நானும் களத்தில் இறங்கினேன். மூச்சிரைக்க ஒரு மணி நேரம் ஆடிய ஆட்டத்தினை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போது உடம்பின் அத்தனை மூட்டுக்களிலும் வலித்தது.

          மறுநாள் காலை ஏற்கனவே ஒழுங்கு செய்து வைத்திருந்த Mekong நதியினூடான குகைக்கோவில் பிரயாணத்தில் கலந்துகொள்ள அவசர அவசரமாகத் தயாரானேன். அந்தக் குறித்த Travel Agent இனுடைய அலுவலகத்தினை அடைய முன்னர் நீண்ட பயணத்திற்கு பொருத்தமாகவும் என்னை நிதானமாகக் கொள்ளும் தலைவலியையும் மனதில் கொண்டு உணவகம் பூந்து உண்டி உட்கொண்டதில் உடம்பில் எடையும் நடையில் திடமும் அதிகரித்துக்கொண்டது. Mekong நதி ஓரமாக என்னை இறக்கி விட்டு என்னை ஏற்றி வந்த Motor Bike நகர்ந்ததும் பற்றுச்சீட்டு காட்டி 'இலக்கம்' பெற்றுக்கொண்டேன்.  அந்த நொடியிலிருந்து அந்தப்பயணம் முடியும் வரை என் பெயர் '34'. இலக்கம் அழைக்கப்பட்டதும் தொற்றிக்கொண்டேன் எமக்காகக் காத்திருந்த வெட்டிச்சாய்த்த பனைமரநீளத்திலிருந்த அந்த மெல்லிய படகில்.

          என்னுடன் சேர்த்து ஒரு பத்துப்பேர் இருந்திருப்பார்கள் அந்தப் படகில். எவருடனும் பேசும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 'வாய்ப்புக் கிடைக்கவில்லை' என்று சொல்வதனை விட வாய்ப்பினை உருவாக்கிக்கொள்வதில் அக்கறைப்படவில்லை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அலையில்லாத அந்த நதியில் பயணிக்கும் போது மனதிலே 'அமைதியான நதியினிலே ஓடம், என்ற வரிகள் அழைப்புமணி அழுத்தாமலே மனதில் வந்து போயிற்று. கூடவே "எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்குறேன், அதனால் ஒருவன் எப்படி வாழவேண்டும் என்று சொல்லக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறது' என்று சொன்ன இந்தப் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரனான அந்தக்காவியக் கவிஞனின் நினைவும் வந்து போயிற்று. என் நிழலுக்கும் மயிர்கூச்செறிய வைக்கும் வித்தை சில நபர்கள் மற்றும் சில விடயங்களால் மட்டுமே முடியும். அந்த வகையில் 'நபர்கள் பட்டியலில்' 'சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைத்த கவிப்புலவ' என்று பாடிய வைரமுத்துவுக்கும் தன்  பாடல் வரிகளில் வாழ்க்கையின் நீல அகலங்கள் சொன்ன கண்ணதாசனுக்கும் என்றும் நீங்காத இடமிருக்கிறது.

          அது ஒரு நீண்ட நெடிய ஆற்றுப்பயணம். போன வழியெல்லாம் நான் கடவுளாக வழிபாடும் இயற்கை அன்னை போட்டு வைத்த கோலங்களை கண்வழியாக மனதிலும் வில்லை வழியாக Camera விலும் சேர்த்துக்கொண்டு உள்ளூர் மதுபானம் (Lao Whisky) தயாரிப்பதனால் பிரசித்தமடைந்த Whisky கிராமத்தில் கரையொதுங்கி அவர்கள் மதுபானம் வடிக்கும் செயன்முறையைப் பார்த்துவிட்டு மீண்டும் தோணி ஏறி குகைக்கோவிலை நோக்கிய எம்முடைய பயணத்தினைத் தொடர்ந்தோம். இன்னொரு 20-25 நிமிட நேரப் பிரயாணத்தின் பின்னர் என்னை பெரிய அளவில் வசீகரிக்காத அந்த குகைக்கோவிலை அடைந்தோம்.

          மதம் என்ற ஒன்று மனித ஜாதிக்கு அறிமுகமாக முன்னரே கவலைகளாலும் வேதனைகளாலும் வாடிய மனிதர்கள் அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த Mekong ஆற்றினையும் அந்த சுற்றாடலில் இருந்த மலைகளையும் தெய்வமாக மதித்து வந்தார்கள் என்பதுவும் குறித்த இரண்டையும் வழிபடுவதற்காக இந்தக்குகையினைப் பயன்படுத்தி வந்தார்கள் என்பதனையும் கேள்வியுற்ற போது, இயற்கையினை மதிக்கின்ற அந்தப்பண்பு எம்மிடையே மறையாமல் இருந்திருந்தால் மதத்தின்பேரால் புரியப்பட்ட பல போர்கள்  தவிர்க்கப்பட்டிருக்கலாம், மண்ணோடு மண்ணாக்கப்பட்ட பல லட்சம் உயிர்களையும் உணர்வுகளையும் இன்னும் கொஞ்சக்காலம் வாழ அனுமதித்திருக்கலாம். இனிமேலாவது போதிமரங்கள் கொடுக்காத ஞானத்தினை (மதத்தின் பேரிலான) இதுவரை ப்னடந்து முடிந்த போர்களாவது கொடுக்கவேண்டும், இல்லை என்றால் 'மனிதன்' என்ற ஒரு இனம் இந்தப்பூமியில் இருந்தது என்று வேறு ஜீவராசிகள் பேசிக்கொள்கின்ற நிலைமை வெகுசீக்கிரத்தில் ஏற்பட்டுவிடும்.

          விடுதி திரும்பி சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு இணையத்தளத்தில் உலாவரத் தொடங்கினேன். நட்புகளுடன் அளவளாவி விட்டு உலக நடப்புகளினை மேலோட்டமாக அறிந்துகொண்டு, கணணி நேரத்தினை முடித்துக்கொண்டேன். பின்னர் அறையினை ஒதுக்குதல், குளியல் என சிறிது நேரத்தினை கழித்துவிட்டு மாலை மங்கியதும் என்னுடைய புகைப்படக்கருவியினைத் தூக்கிக்கொண்டு இரைக்காகத் தவமிருக்கும் விலங்காக என் கண்ணுக்கு விருந்தளிக்கக்கூடிய காட்சிகள் தேடி அங்குமிங்கும் அலையத்தொடங்கினேன். தேடும் போது தான் வாழ்க்கை சுவாரசியமடைகின்றது என்பது அன்று மீண்டும் எனக்குப் புரிந்தது. கால்போன போக்கில் நடந்ததில் பல அழகான இடங்கள் என் கண்ணிலும் கூடவே என் Camera வில்லையிலும் சிக்கின. அத்தனை அழகையும் அள்ளி நிரப்பிக்கொண்டபோது "என் மேனியெல்லாம் கண்ணாகச் சபிக்க வேண்டும்" என்ற வைரமுத்துவின் வரிகள் என்  மூளையின் இடுக்குகளில் கிச்சுகிச்சு மூட்டின.

          இயற்கையாக உருவானவற்றையும் மனிதனால் உருவாக்கப்பட்டவற்றையும் நான்கு புலன்களால் உணர்ந்துகொண்டே நடந்து இரவுச்சந்தையினை அடைந்தேன். வீதி எங்கும் பரப்பிக்கிடந்த பொருட்களைக் காணும் போது வியப்பும் பெண்களின் இயற்கை அழகின் மீது சந்தேகமும் வந்தது. அங்கு இருந்த பொருட்கள் 99 சதவீதத்துக்கு மேலானவை பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள். பெரும்பாலும் ஆடைகள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள். திருக்குறளில் வள்ளுவனும், 'வில்லோடு வா நிலவே' யில் வைரமுத்துவும் சொன்ன பெண்மையின் அழகின் லட்சணங்கள் வெறும் கவித்துவக்  கற்பனைகளா என்று மனம் ஒரு கணம் தடுமாறியது. 'ஆள் பாதி; ஆடை பாதி' என்ற உன்னுடைய பழமொழியைப் புதைத்த இடத்தில் முளைத்த புல் அல்ல விழுதுவிட்ட ஆலமரமே முளைத்துவிட்டது தமிழா" என்று கத்தத் தோற்றியது எனக்கு. வண்ணவண்ணமாய் ஜொலித்த அத்தனை பொருட்களில், என் நெஞ்சில் நங்கூரமிடவற்றை மட்டும் விழிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்து கொண்டு மறுநாள் காலையில் Cambodia செல்வதற்கான விமானத்தில் தொற்றிக்கொள்ள முன்னர் (இயன்ற வரையில் குறைந்த செலவுடன் என்னுடைய சுற்றுப்பயணத்தினை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற கணக்கினை நாட்கணக்கு ஏற்கனவே தவிடுபொடியாக்கியிருந்தது. அனுமார் வாலாக நீண்டு கிடந்த இந்த நாடுகளுக்கு இடையில் தரைவழிப் பயணம் மேற்கொண்டு என் நாட்களை வீணடித்துக்கொள்ள விரும்பாது நான் எடுத்துக்கொண்ட ஒரு ஆக்கபூர்வமான தீர்மானம்) அதிகாலையில் மீண்டும் ஒரு வீதியுலா வரவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு விடுதியடைந்து நான்கு சுவர்களின் நடுவே என்னை நானே புதைத்துக் கொண்டேன்.

          Lao PDR இல் என்னுடைய இறுதி நாள். கடந்த இரவு திட்டமிட்டதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக கதிரவனுக்கு வழமைக்கு மாறாக அதிகாலையிலேயே கண்விளித்து கடகடவென்று காலைக்கடமைகளை முடித்துக்கொண்டு ஒரு விரைவு-வீதி உலாப் போனேன். மீண்டும் விடுதி திரும்பி வேர்வையால் நனைந்திருந்த மேனியினை நீரில் நனைத்து புத்துணர்வு பெற்றுக்கொண்டு அங்கங்கே சிதறிக்கிடந்த அத்தனை உடமைகளையும் என் முதுகுப்பையில் அள்ளித்திணித்துக்கொண்டு வீதி முனையில் தரித்து நின்ற Tuk Tuk இனை அடைந்து வார்த்தைகளாலும் சைகைகளாலும் பேரம் பேசி முடித்து ஏறி அமர்ந்த போது 'மீண்டும் எப்போது?' என்று மனது அங்கலாய்த்தது. ஒரு 20 நிமிட நேர Tuk Tuk பயணத்தின் பின்னர் விமான நிலையம் வந்தடைந்தேன். யாழ்ப்பாண பேருந்து நிலயத்தினை விடக் கேவலமான நிலையில் இருந்த Luang Prabang சர்வதேச விமான நிலையத்தினை அடைந்த போது மிகவும் பழக்கப்பட்டுப்போன காகிதக்கடமைகள் முடிக்க நேரமிருந்தது. சற்று நேரம் ஒரு ஓரமாக அமர்ந்திருந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த தேசத்திற்கான என்னுடைய பயணத்தினை ஆரம்பித்தேன்.


கம்போடியா (Cambodia)
          சுமார் 2 மணி நேரம் கழித்து உலோகப்பறவை Siem Reap சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. குடிபெயர்வு அதிகாரியிடம் என் கடவுச்சீட்டைக் காட்டியதும் நான் இலங்கையன் என்பதனைத் தெரிந்துகொண்ட அதிகாரி என்னை 'மேலதிக' விசாரணைகளுக்காக அவர்களுடைய அலுவலகத்திற்கு என்னை வேறொரு அதிகாரியுடன் அனுப்பி வைத்தார். என்னுடைய கடவுச்சீட்டில் பச்சை நிறத்தில் ஜொலித்த Cambodian Visa வினை (நான் $20 செலுத்தி மலேசியாவில் பெற்றுக்கொண்டது) அந்த அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்த 30 வருட வாழ்க்கையில் நான் எழுதி முடித்த ஒட்டுமொத்தத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களை விட அதிக எண்ணிக்கையில் அவர்கள் கேட்ட வினாக்களுக்கு நான் பொறுமையாகவும் தெளிவாகவும் பதிலளித்தும் அவர்கள் திருப்தி அடைந்ததாகத்தெரியவில்லை. ஏதோ Syria பிரச்னைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் தீர்மானம் எடுப்பது போல அடிக்கடி கூடிப் பேசினார்கள். கடைசியில் என்னை 5 நாட்கள் தங்க அனுமதிப்பதாகத் தெரிவித்தார்கள். அப்படியே அந்த அதிகாரிகள்(????) குழுவின் தலைவர் என் காதுகடித்து $5 லஞ்சம் கேட்டார். இந்த லஞ்ச நடைமுறை பற்றி ஏற்கனவே என் நண்பன் மூலமாக அறிந்திருந்ததனாலும் அவர் கேட்ட தொகை மிகச்சிறியது என்பதனாலும் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இருந்தாலும் எனக்கு visa வழங்குவது தொடர்பில் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு தான் ஏற்படுத்திய தொலைபேசிக் கட்டணங்களுக்காகவே தான் அந்த          
அந்த $5 (லஞ்சம்) வாங்கக் காரணம் என்று அந்தத் தலைமை அதிகாரி சொன்ன போது  எனக்கு ஏற்பட்ட உணர்வை வர்ணிக்க வழக்கில் இருக்கும் மொழிகள் போதாது. கொடுத்த லஞ்சத்தின் உதவியுடன் ஒரு வார அனுமதியினைப் பெற்றுக்கொண்டு வாசற்படி தேடி நடந்தேன்.

          என்னுடைய 1 1/2 மணி நேரத்தினை அந்த $5 க்காக வீணடித்த அதிகாரிகளுக்கு நன்றி சொல்லி, தமிழனாகப் பிறந்ததற்காக சொந்த நாட்டிலும், இலங்கையனாகப் பிறந்ததற்காக அந்நிய நாடுகளிலும் அவமானப்படும் அவல நிலையை எண்ணிக்கொண்டே வெளியில் வந்த போது பேரம் பேசுவதற்கான தேவையின்றி விமான நிலைய வாயிலிலேயே $2 க்கு கிடைத்த motorcycle சவாரி என்னைச் சற்று ஆறுதற்படுத்தியது. என்னையும் செலுத்துனரையும் சுமக்க முடியாமாயில் சுமந்து சென்ற அந்தச் சிறிய மோட்டார்சைக்கிள் நகரமத்தியினை வந்தடைந்தது. விமானநிலையத்திலேயே மோட்டார்சைக்கிள் பயணத்துக்கான பணத்தினை செலுத்திவிட்டதனால் செலுத்துனருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தெரியாத ஊருக்கு வழி  விசாரித்துக் கொண்டே நடந்ததில் விடுதி ஒன்றின் முகவரி கிடைத்தது. சரியான முகவரி தேடி மூச்சிரைக்க நடந்ததில் முதுகுத்தண்டில் வலி துளிர்த்தது. விடாப்பிடியாக நடந்து விடுதி அடைந்து குளித்து முடித்து கட்டிலில் சாய்ந்த போது களைப்பினால் உடலும் அவமானத்தினால் மனமும் மிகவும் சொர்வடைந்திருந்தது. பிரயாணத்தினைத் தொடராமல் பேசாமல் திரும்பிவிடலாமா என்று கூட மனம் ஒரு கணம் நினைத்தது.

          என்னை ஏற்றி விட்டவர்களை விட தடுத்துத் தோற்றவர்கள் அதிகம் என்பதனால் வைராக்கியம் ஏறியிருந்த மனது அந்த ஒற்றை நொடி சலனத்தினை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்தது. சிறிது சுதாரித்துக்கொண்ட உடலில் பசியின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்ததும் மாற்றுடை அணிந்து வீதிகளில் இறங்கி நடந்தபோது அந்நிய தேசம் காரணமில்லாமல் அச்சுறுத்தியது. ஒரு சாண் வயிற்றில் உண்டி இறங்கியதும் சகலதும் மறந்து உறங்கத்தோன்றும் என்பதனைத் தெரிந்து வைத்திருந்ததனால் 'உண்ணலை' சற்று நேரம் தள்ளி வைத்துவிட்டு அலங்கார விளக்குகள் நிறைந்திருந்த சாலைகளில் அடியெடுத்து வைக்கத்தொடங்கினேன். புருவங்களை விடவும் இருண்டிருந்த வானம், அறிமுகமில்லாத ஊரில் பூச்சாண்டி காட்டியது. திசைகள் தெரியாமல் நடந்து தொலைந்து விடக்கூடாது என்று மிகக்கவனமாக எல்லை வகுத்து சுற்றிப்பார்த்ததில் அந்தச் சுந்தரபுரியின் சூட்சுமம் சற்றே புரிந்தது. தொடர்ந்து நடந்து இரவுணவு முடித்துவிட்டு மறுநாள் காலையில் Angkor Wat இல் சூரியோதயம் தரிசிப்பதற்கு பயண ஒழுங்குகள் செய்துவிட்டு தூங்கச்சென்றுவிட்டேன்.

          காலை 4 மணிக்கு எல்லாம் கண்விழித்து என்னைத் தயார் படுத்திக்கொண்டு Guest House இன் வரவேற்பு மண்டபத்துக்கு வந்த போது ஒழுங்கு செய்திருந்த tuk tuk எனக்காக காத்திருந்தது. காலை வணக்கம் சொல்லி குட்டையாக இருக்கும் கூரையிடம் குட்டு வாங்கிக்கொள்ளாமல் ஏறிக்கொண்டு 'தயார்' என்று சொன்னதும் அந்த அதிகாலைப்பொழுதின் அமைதியினைக் குலைத்துக்கொண்டு 'விர்ர்' என்று பயணிக்க ஆரம்பித்தது அந்த tuk  tuk . 5 மணித்தென்றல் தான் சேகரித்து வைத்திருந்த குளிர்மையை என் மீது தெளித்துச்சென்ற போது பட்டாம்பூச்சியாகப் பறக்கத் துடித்த மனது இல்லாத சிறகுகளுக்காக ஏங்கத்தொடங்கியது. 15 மாதங்களாக அறுவடை காணாத என் தலைமுடி ஆடிக்காற்றில் அலையும் பட்டங்களாக என் முகமெங்கும் பரவிக் கிடக்க அந்த அழகிய சொர்க்கம் நோக்கிய 20 நிமிட நேரப்பயணம் முடிவுக்கு வந்தது. 'ஒரு நாள் பற்றுச்சீட்டு' வரிசையில் நின்று webcam இற்கு pose கொடுத்து சரியான Ticket இனைப் பெற்றுக்கொண்டு Angkor Wat இனை  சென்றடைந்தேன்.

          Angkor Wat - வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு அதிசயம். விமான நிலையத்தில் கிடைத்த 'வரவேற்பினால்' சலித்துப்போயிருந்த மனம் சட்டென்று களிப்பின் மிகுதியால் கதகளி ஆடத்தொடங்கியது. எத்தனை முறை தயார்படுத்திக்கொண்டாலும் முதற் காதல் சொல்லும் போது ஓடி  ஒளிந்துகொள்ளும் வார்த்தைகளைப் போல, பல நூறு நூல்களை வாசித்து என் மூளையின் அத்தனை மடிப்புகளிலும் சேகரித்து வைத்திருந்த அத்தனை வார்த்தைகளும் காணாமற்போனது அது தான் முதற்தடவை. உடம்பெல்லாம் கண்ணாகச் சபிக்கக் கேட்ட வைரமுத்துவின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொண்டது அன்று தான். (இந்த ஒற்றைப் பந்தியை எழுத எனக்கு ஒரு நாள் தேவைப்பட்டது. அப்போது கூட, Angkor Wat இன் வசீகரத்தினை வார்த்தைகளில் பிரதிபலிக்க வைக்க முடியாத என் ஆற்றாமையை சொல்ல முடிந்ததே தவிர, அதன் அழகினை அல்ல. சட்டத்தரணித் தொழிலை உடையில் ஒட்டிய பூச்சியாக உதறித்தள்ளிவிட்டு ஓர் எழுத்தாளன் ஆகலாமா என்று பல நாட்களாக என் மூளைக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்த சிந்தனைக்கு இரங்கற்பா பாட வைத்தது இந்த வாரம் தான்).

Angkor எனப்படுகின்ற ஏறத்தாள 400 சதுரகிலோமீற்றர் பரப்பளவுடைய அந்தத் தொல்பொருளியல் பிரதேசம், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கர்வத்துடன் மார்தட்டிக் கொள்ளக்கூடிய விடயம் / படைப்பு. ஒவ்வொரு அங்குலமும் கைத்தேர்ந்த சிற்பாச்சாரிகளினால் சிரத்தையுடன் செதுக்கப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்து இயற்கையின் அழகினை எள்ளி நகையாடக்கூடிய தகுதி இதற்கு மட்டும் தான் தான் இருக்கிறது. Panama City, Kuala Lumpur City மற்றும் Manila City என்று நாகரீகமும் மேல்நாட்டு மோகமும் நிரம்பி வழியும் நகரங்களில் பயணித்த போது  அங்கிருத்த வான் உரசும் பளிங்கு மாளிகைகளில் உலா வந்த போது வராத அந்தக் களிப்பு இந்த இடிபாடுகளினூடு நடந்த போது என் இதயத்தின் அத்தனை இடுக்குகளையும் நிரப்பிச்சென்றது. கெண்டைக்காலில் கம்பளம் விரித்து உட்கார்ந்துகொண்ட வலியையும் பொருட்படுத்தாமல் அத்தனை ஆலயங்களையும் ஒன்று விடாமல் அலசியதில் நேரம் மெழுகாக உருகியது. காலை 5 மணிக்கு ஆரம்பித்த என்னுடை தொல்பொருளியல் வேட்டை மதியம் கடந்து சில நாளிகைகளின் பின்னரும் தொடர்ந்தது. என்னுடைய வேட்கையைப் புரிந்துகொண்ட  முச்சக்கரவண்டிச் சாரதி ஏற்கனவே பேசிய தொகையினை விட மேலதிகமாக $5 கொடுத்தால் Angkor இலிருந்து 35 km தொலைவிலுள்ள இன்னொரு ஆலயத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியதற்கு சம்மதம் தெரிவித்து ஏறி அமர்ந்தேன் அந்த நவீன சரட்டுவண்டியில்.

          இன்னும் சுயம் தொலைக்காத சில கிராமங்களின் ஊடக வளைந்து சென்ற பாதையில் முகம் மோதிச்சென்ற இளந்தென்றலையும் கூடவே நாசி வருடிச்சென்ற மாட்டெரு நெடியையும் கண்மூடி அனுபவித்துக்கொண்டு பயணித்ததில் கோபமாக சுட்ட சூரியனைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் குலுங்கி நின்ற அந்த முச்சக்கரவண்டி என்னை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது. முற்றுமுழுதாக பெண்களாலேயே அமைக்கப்பட்டதனால் 'பெண் கோவில்' என்று அழைக்கப்படுகின்ற இன்னொரு ஆச்சரியம் அது. நுட்பமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கோவிலை மோகம் மூர்ச்சையாகும் வரை ரசித்துவிட்டு அடியேன் என் தங்குமிடம் நோக்கிப் பயணப்பட்டேன். உடம்பின் ஒவ்வொரு அணுவும் ஓய்வு வேண்டி அழுததில் என் உடல் நனைந்திருந்தது. பரவசம் மறைத்திருந்த பசி, பனி விலகும் போது விரியும் / தெரியும் காட்சி போல தன் இருப்பைப் பகிரங்கப்படுத்தியது. தங்குமிடம் செல்லும் வழியிலேயே இருந்த ஒரு உணவு விடுதியில் tuk tuk இனை நிறுத்தி,  நன்றி தெரிவித்துவிட்டு அவசரமாக சென்று அமர்ந்ததில் பாதி உயிர் திரும்பக் கிடைத்த உணர்வு எனக்கு, பட்டியல் பார்த்து நாவிற்கும் பணப்பைக்கும் பொருத்தமானதனை கொணரச் சொல்லிவிட்டு காத்திருந்த நொடிகள் ஒவ்வொன்றும் காதலின் பிரிவை விடக் கொடுமையானது.

          சிரித்த முகத்துடன் பரிமாறிய அந்த இளம் பெண்ணுக்கு புன்னகையாலேயே நன்றி தெரிவித்துவிட்டு 'கருமமே கண்ணாக' உணவருந்தியதில், பத்தில் எதனையும் பறக்க விடாமல் (பசி வந்தால் பத்தும் பறந்து போகும்) காப்பாற்ற முடிந்தது. கடைசிக் கவளத்தையும் நிதானமாக மென்று விட்டு கட்டணம் செலுத்தி மிக அருகாமையிலேயே இருந்த விடுதியினை பொடிநடையாக அடைந்து கட்டில் சேர்ந்த போது  கண்மடல்களின் மேலே பாறாங்கல்லின் பாரத்தினை உணர்ந்தேன். வேர்வை நனைத்திருந்த உடலினை கழுவிட்டுப் படுத்துறங்கிக் கண்விளித்த போது பூமி கதிரவனுடன் கோபித்து முகம் திருப்பியிருந்தது. மீண்டும் ஒரு குளியல் போட்டு வெளியில் வந்த போது சற்று ஊர் சுற்றிப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. சட்டென்று திசையை மாற்றி நடந்ததில் சுற்றுலாப்பயணிகளால் நிறைந்திருந்த தெருவினை அடைய முடிந்தது. அங்கும் இங்கும் என்று கால் போன போக்கில் நடந்து விட்டு இனிமேலும் வயிற்றின் கோரிக்கையினைப் புறக்கணிக்க முடியாது என்ற நிலை வந்ததும் பொருத்தமான உணவுச்சாலை தேடியடைந்தேன். இரவுணவு முடித்து விடுதியடைந்ததுடன் முடிந்தது Siem Reap இல் என்னுடைய இரண்டாம் நாள்.

          காலையில் சற்று நேரம் கழித்தே கண்விழித்து தயாராகி ஏற்கனவே பேரம் பேசி வைத்திருந்த மோட்டர்சைக்கிள் சாரதியினை அவர் சொன்ன இடத்தில் சந்தித்து  இருவருமாக Floating Market இருக்கும் இடத்தினை நோக்கிப் புறப்பட்டோம். நாம் சென்ற வீதி Cambodia வின் இன்னொரு முகம். ஆற்றினையும் நீர்த்தேக்கத்தினையும் நம்பி வாழ்க்கை நடத்தும் சமுதாயத்தினை / சமுதாயங்களினை வழிநெடுகக் காண முடிந்தது. அங்கு வாழ்கின்ற பெரும்பான்மையானவர்களின் சுதேசியம் Cambodia அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதனை அறிந்துகொண்டேன். அதாவது அவர்கள் Stateless people. இவர்களுக்காகக் கவலைப்படவும் யாருமில்லை. மனிதன் வகுத்த எல்லைக்கோடுகள் எந்த அளவுக்கு மனிதனை 'அடையாளமில்லாதவன்' ஆக்கி விடுகின்றது என்று எண்ணிய போது வெளிவந்த பெருமூச்சில் வெம்மை  அதிகமாக இருந்தது.

          சுமார் 1/2 மணி நேரப் பயணத்தின் பின்னர் படகுத்துறையினை அடைந்தோம். வாய்க்கு வந்த கட்டணம்  கேட்பார்கள், ஆனால் உண்மையில் அது $20 தான் என்று, நான் பயணம் செய்த Motorcycle இனை  ஒழுங்கு செய்து தந்திருந்த உள்ளூர்ப் பெண்மணி ஏற்கனவே சொல்லிவைத்திருந்ததனை மனதில் இருத்திக்கொண்டு Counter சென்ற போது  அவர் சொன்னது போலவே $30 என்று சொன்னார்கள். நான் வாதாடித் தோற்று என்கூட வந்தவருக்கு அவருக்குப் புரியாத பாசையில் புரியவைத்துக்கொண்டிருக்கவும் அந்த உள்ளூர்ப்பெண்மணி அவரினைத் தொலைபேசியில் அழைக்கவும் சரியாக இருந்தது. பின்னர் அவர் Counter இல் இருந்தவருடன் என்ன பேசினாரோ தெரியாது, $20 இற்கு சம்மதித்தார்கள். அந்தப்பெண்மணிக்கு மனதுக்குள்ளும் Counter இல் இருந்தவருக்கு வாய்விட்டும் நன்றி சொல்லிப் படகினை அடைந்த போது  புன்னகையுடன் வரவேற்றனர் படகோட்டியும் வழிகாட்டியும். போகும் வழியெல்லாம் அந்த இடத்தினைப்பற்றியும் அங்கு வாழ்பவர்களின் வாழ்க்கை முறை  பற்றியும் அவர் விபரமாகச் சொல்லிக்கொண்டே வந்ததில் ஒரு விவரணப்படம் பார்த்த திருப்தி கிடைத்தது எனக்கு.

          அப்பிடியே சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பரந்த நீர்ப்பரப்பில அங்கேயும் இங்கேயும் என்று வழிகாட்டி சொன்ன விவரணத்தினைக் கேட்டுக்கொண்டே அந்த மிதக்கும் கிராமத்தின் மத்தியில் இருந்த முதலைப்பண்ணையைப் பார்க்கச் சென்றேன். முதலைத்தோலுக்கு அங்கே மவுசு அதிகம் என்பதனால் அங்கிருந்த நீர்வாழிகள் அந்தத் தண்ணீர்க்காட்டின் நடுவில் அவற்றினை வளர்த்து வந்தார்கள். வாயைத் திறந்த படியே குளிர் காய்ந்துகொண்டிருந்த அந்தப் பருத்த பயங்கரமான உருவங்களைப் பார்த்த போது 'பயத்தின்' அர்த்தம் அகராதி இல்லாமலே புரிந்தது. ஒரு சில புகைப்படங்களில் அவற்றினைப்பதிவு செய்து கொண்டு அங்கிருந்து நான் புறப்படத் தயார் என படகோட்டிக்கு அறிவித்த போது பாம்புகளை மாலையாக அணிந்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்த சிறுவர்களைக் கண்டேன். ஏற்கனவே புயலில் சிக்கிய குடிசையாக சின்னாபின்னமாகியிருந்த என்னுடைய தைரியம் இப்போது சுனாமியில் சிக்கிய சிறுமணலாக இருந்த தடம் தெரியாமல் மறைந்து போனது. அம்மா போட்டுவிட்ட அரைஞாண் கொடியை (வெட்கத்தில்) நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்கும் பருவ வயதுக்காரன் போல என்னை ஆட்கொண்டிருந்த பயத்தினை என் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகையின் உதவியுடன் மறைத்துக்கொண்டேன்.

          பயத்தினை மறைத்த வண்ணம் பதட்டப்படாமல் படகில் ஏறி அமர்ந்த பின்னர் தான் அதுவரை பதுங்கி இருந்த ஆண்மை மீண்டும் திரை விலக்கியது. படகு கரை ஒதுங்கியதும் என்னை அழைத்து வந்த மோட்டார்சைக்கிள் சாரதியினை அவர் அணிந்திருந்த மேலாடையினை வைத்து அடையாளம் கண்டு வீடு திரும்பலாம் என்று கூறியதும் யாழ்ப்பாணத்து மண்ணெண்ணெய் யுகத்தினை நினைவுபடுத்தும் சத்தத்துடன் அது நகர ஆரம்பித்தது. ஆசையின் உச்சக்கட்டமாக அண்டத்தையும் கூறு போட்டுப் பிரித்துக் கொண்டிருக்கும் மனிதவர்க்கம் அங்கே அந்த வாவியைக் கிழித்துப் போட்டிருந்த தெருவின் இரண்டு பக்கங்களிலும் அமைந்திருந்த பாதி நீரில் - பாதி தரையில் என்று அமைந்திருந்த குடில்களை, கடவுள் பாதி, மிருகம் பாதி என்ற பாடலை முனுமுனுத்துக்கொண்டே ரசித்ததில் நான் தங்கியிருந்த இடத்தினை வெகு சீக்கிரத்திலேயே அடைந்து விட்டதாகத் தோன்றியது எனக்கு. என் தங்குமிடத்துக்கு அருகில் இருந்த உணவுச்சாலையில் என் வேண்டுகோளின் பிரகாரம் என்னை இறக்கிவிட்ட அந்த சாரதிக்கு நன்றி சொல்லி 'கும்பிபோகம்' செய்ய ஆரம்பித்தேன்.

          இடைவிடாத பயணத்தினால் என் உடலே எனக்குப் பாரமாகத் தெரிந்தது. அதற்கும் மேலதிகமாக என் இரப்பையில் சேர்ந்து கொண்ட உணவு, ஓய்வின் தேவையை சற்று உரக்கவே சொல்லியதில் என் உறங்கலிடம் அடைந்து உடல் கழுவி மஞ்சம் சேர்ந்தேன். அந்த ஒரு மணி நேர உறக்கம் என் உடலினை அடுத்து வந்த 12 மணி நேரப் பயணத்திற்கு ஆயத்தம் செய்திருந்தது. Cambodia வின் தென்பகுதியில் அமைந்திருந்த அந்த அழகிய கடற்கரையினை நோக்கிய நோக்கி நாடு இரவில் ஆரம்பித்த பயணம் மறுநாள் மதியம் வரை நீடித்தது. அந்தத் தூரப்பேருந்திலிருந்து இறங்கி Cambodia வின் சௌகரியங்களில் ஒன்றான வாடகை மோட்டார்சைக்கிளில் ஏறி விடுதியடைந்து புத்துணர்வூட்டிக்கொண்டு அந்த விடுதியிலேயே அமைந்திருந்த உணவுச்சாலையில் உணவருந்திவிட்டு அந்த சிறிய ஊரில் அங்குமிங்கும் சிறிது நடந்துவிட்டு அப்படியே கடற்கரை ஓரமாக நடக்க ஆரம்பித்த போது கதிரவன் கடமை முடித்துக் கடல் திரும்ப ஆயத்தம் செய்துகொண்டிருந்தான். கூடவே எடுத்துச் சென்ற என்னுடைய புகைப்படக்கருவியில் அந்தத் தூரிகை தொடாத ஓவியத்தினை ஒளிப்படமாகப் பதிவு செய்ததில் மனது நிறைந்தது.

          அந்த Sihanoukville கடற்கரை, இலங்கைத் தீவில் இருக்கும் (யாழ்ப்பாணக்) குடாநாட்டில் பிறந்த என்னை, எள்ளளவும் வசீகரம் செய்யவில்லை என்பதனை நான் இங்கே குறிப்பிட வேண்டும். இந்த வரிகள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நொடிகள் வரை எதற்காக நான் அங்கு போனேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த ஊர் எனக்கானதில்லை என்பதனை அன்றைய மாலையே உணர்ந்துகொண்டு மீண்டும் Vietnam செல்வதற்கான வழிமுறைகளை ஆராயத்தொடங்கினேன். Sihanoukville இலிருந்து நேரடியாக Vietnam செல்ல எந்த வழியும் இல்லை என்பதனைத் தெரிந்துகொண்டு, மறுநாள், முதலில் Cambodia தலைநகர் சென்று பின்னர் அங்கிருந்து Ho Chi Minh City செல்வதற்கான ஏற்பாட்டினை Sihanoukville இலேயே செய்துகொண்டு விடுதியடைந்தேன். மிக நீண்ட பயணமும், கடற்கரை உப்புக்காற்றும் காதலுடன் பருகிய சோமபானமும் என்னைத் தாலாட்டு இல்லாமலே கட்டில் சேர்க்க, தூக்கம் என் தோள்களில் உட்கார்ந்துகொண்டது.

          அங்கு செய்வதற்கு எதுவுமில்லை என்று ஏற்கனவே தெரிந்துவைத்திருந்ததனால் சற்று நேரம் தாழ்த்தியே கண்விழித்தேன். செய்வதற்கு எதுவுமில்லாது அந்த நான்கு சுவர்களுக்கு இடையில் தனித்திருந்த போது தான் "மூன்று வாரங்களில் மூன்று தேசங்கள்..." இற்கான எண்ணம் உதித்தது. மற்றவர்களை  வசீகரிக்கத் தவறினாலும் காலம் கடந்து என் பயண நினைவுகளைப் புதுப்பிக்க எனக்காவது உதவும் என்ற நம்பிக்கையுடன் இலத்திரன்களை எழுத்துருவில் கோர்க்கத்தொடங்கினேன். மதியமானதும் என் கிறுக்கலை இடைநிறுத்திவிட்டு விடுதியைக் காலி செய்துகொண்டு மதிய உணவு தேடிப் புறப்பட்டேன். மதிய உணவிலிருந்து மாலை 5 மணி பேருந்து வரை, நேரம், என் மூளையின் மடிப்புகளில் அங்கங்கே சிதறிக்கிடந்த நினைவுகளை, அனாவசிய வார்த்தைகளின்றி, உண்மை திரியாமல், எழுத்துகளில் கோர்த்ததில் கழிந்து போனது.

          5 மணி, ஐந்தரை மணி, 6 மணி என்று வழமையைப் போலவே, Phnom Penh இனை நோக்கி(க்), காலம் தாழ்த்திப்புறப்பட்ட பேருந்தின் இயந்திரத்தினை விட வேகமாகத் துடித்தது என் இதயமும் என் சட்டைப்பையிலிருந்த Phnom Penh - Ho Chi Minh City பயணச்சீட்டும், எங்கே (அடுத்த) பேருந்தினைத் தவறவிட்டு விடுவோமோ என்ற அச்சத்தில். இரவு உணவுக்காகப் பேருந்து இடைவழியே நிறுத்தப்பட்ட போது என்னுடன் பேச்சுக்கொடுத்த உள்ளூர்க்காரன் கொடுத்த தைரியம் மற்றும் நம்பமுடியாத வானிலை அறிக்கைளின் மத்தியில் அந்தப் "பேருந்து-நிலை அறிக்கை" சற்று ஆறுதல் அளித்தாலும், அச்சத்தினை அறவே போக்கியது என்று கூறுவது 'நாளை கிடைக்கும் யுத்தமில்லாத பூமி' என்று கூறுவதனைப் போன்றது. அடுக்களை வரை சென்று பெற்றுக்கொண்ட Fried Rice ('பொரித்த அரிசி' - அழியாத தமிழை வாழவைப்பதாகக் கூறி, தமக்கு அடையாளம் தேட எத்தனிக்கும் உள்நாட்டு,  வெளிநாட்டு நலன் விரும்பிகளுக்காக) இனை வயிறு நிறையத் திணித்துக்கொண்டு பேருந்தினை அடையவும் வண்டிச்சாரதி பேருந்துக்கு உயிர்  நேரம் சரியாக இருந்தது.

          அந்த உள்ளூர்க்காரன் சொன்னதைப் போலவே நான் எதிர்பார்த்ததனை விட 2 மணி நேரம் முன்னதாகவே, நான் பயணித்த பேருந்து Phnom Penh இனை  அடைந்தது. அருகிலிருந்த விடுதியில் மற்றைய பேருந்து நிலையத்தின் அமைவிடம் பற்றி விசாரித்துக்கொண்டு விடுதியின் வாயிலிலேயே தரித்திருந்த மோட்டர்சைக்கிளினை ஒழுங்கு செய்துகொண்டு சென்றடைந்த போது நள்ளிரவிலும் ஆரவாரப்பட்டுக்கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலையம் என்னை ஆச்சரியப்படுத்தியது. எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தினை  உறுதி செய்துகொண்டு அருகில் அடங்குவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த இரவுச்சந்தையினை நோக்கி நடந்தேன். அங்குமிங்கும் நடந்து ஒரு மணி நேரத்தினை கபளீகரம் செய்துவிட்டு மீண்டும் பேருந்து தரிப்பிடம் அடைந்து இன்னும் வராத பேருந்துக்காக கால்கடுக்கக் காத்திருக்கத் தொடங்கினேன். காதலிக்காகக் கூட காத்திருந்து பழக்கமில்லாத எனக்கு இந்த "பேருந்துக்(காகக்)-காத்திருத்தல்' மிகவும் பரிச்சயம் என்றாலும், இரண்டாவது வாரமாக விடாமல் தொடரும் என்னுடைய நாடுகாண் பயணம் என்னை மிகவும் தளர்வடையச் செய்திருந்தமையினால் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகத் தெரிந்தது எனக்கு.

          காத்திருப்பினை வீணடிக்காது வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி அமர்ந்ததிலிருந்து மறு நாள் காலை 10 / 11 மணி அளவில் Ho Chi Minh City இனை அடையும் வரை, ஒரு ஐரோப்பிய உல்லாசப்பயணியை சந்தித்ததைத் தவிர, இங்கு குறிப்பெழுதும் அளவுக்கு வேறு எதுவும் விசேடமாக நடக்கவில்லை. Ho Chi Minh City வீதிகளில் அந்த ஐரோப்பிய உல்லாசப்பயணியுடன்  நடந்து அவர் ஏற்கனவே முற்பதிவு செய்து வைத்திருந்த சற்று ஆடம்பரமான விடுதியின் முன்னால், அந்த விடுதி என்னுடைய நிதிநிலைக்கு பொருத்தமாக அமையாததனால், 'சிந்திப்போம்' கூறி விடை பெற்றுக்கொண்டு என் பணப்பைக்குப் பொருத்தமான விடுதியொன்றினை அடைந்தேன். அந்த விடுதிக்கு அருகிலேயே இருந்த 'பயண ஏற்பாட்டாளரிடம் (Travel Agent) என்னுடைய அடுத்த பயணத்திற்கான ஏற்பாடுகளினை முடித்துக்கொண்டு எனக்கென வழங்கப்பட்ட அறையினை அடைந்தேன். வழமையைப்போல என்னையும் என் உணர்வுகளையும் புதுப்பித்துக்கொண்டு வீதியுலா வந்தேன். வீதியுலா முடித்து மீண்டும் கூடடைந்து, சுமார் 20 மணி நேரமாக தவிர்க்க முடியாத காரணங்களினால் துண்டிக்கப்பட்டிருந்த இணைய உலகில் வலம் வர ஆரம்பித்தேன். மீண்டும் வீதியுலா, இரவுணவு என்று விசேஷங்கள் எதுவுமில்லாமலே கழிந்துபோனது அன்றைய நாள். மறுநாள் (அதி)காலையில், என் ஊர் சுமங்கலிகளின் தாலிக்கொடியாக நீண்டு கிடக்கும், Vietnam இன் மத்திய பகுதியினை  குறுகிய நேரத்தில் அடைவதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி விமான நிலையம் அடைந்தேன்.

        சிலமணி நேரக் காத்திருப்பு, வழமையான சம்பிரதாயங்கள், சில மாநிலங்கள் / மாகாணங்கள் என எல்லாவற்றையும் கடந்து Da Nang இல் விமானம் தரை இறங்கியபோது நேரம் காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் விடாது ஓடிக்கொண்டிருந்தது. விமானநிலையத்திலிருந்து Hoi  An செல்வதற்கான பேருந்து நிலையத்தினை மானி (Meter) பொருத்திய வாடகை வண்டியில் வந்தடைந்த போது, என்னை, அங்கிருந்த உள்ளூர்க்காரியுடன் சேர்ந்து ஏமாற்ற முனைந்த வண்டிச்சாரதியுடன் சண்டை பிடித்து, ஏற்கனவே Hoi An நோக்கி உருள ஆரம்பித்திருந்த பேருந்தில் இருக்கை தேடி அமர்ந்த போது  உடலும் மனமும் சற்று ஆசுவாசப்பட்டுக்கொண்டன. உல்லாசப்பயணிகளை கூண்டிற்கு வெளியே உலாவரும் விலங்குகளாக வேடிக்கை பார்க்கும் அந்த ஊர் மக்களின் நடுவில் ஒற்றை வெளியூர்க்காரனாக வீதிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்ததில் ஒன்றரை மணி நேரம் சங்கடமில்லாமற் கழிந்து போயிற்று.

          Hoi An இல் அங்கு ஏற்கனவே ஊர் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த என்னுடன் கூடப்படிக்கும் மாணவி தங்கியிருந்த விடுதியினை அடைந்து அருகிலிருந்த இன்னொரு ஊருக்கு சென்றிருந்த அவர் திரும்ப வரும் வரைக்கும் காத்திருந்து இருவருடைய பயணத்திட்டங்களும் ஒன்றாக இருப்பதனை உறுதி செய்துகொண்டு அதே விடுதியில் தங்க முடிவெடுத்தேன். நாங்கள் இருவரும் தங்கியிருந்த விடுதியிலேயே இலவசமாகக் கிடைத்த ஈருருளியினை எடுத்துகொண்டு இருவரும் ஊர் சுற்ற ஆரம்பித்தோம். மரங்களாலான பழைய கட்டட வடிவமைப்புக்களை இன்றைக்கும் மாற்றாது பேணி அந்த நகரின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டிருந்த அந்த வீதிகளின் வழியே ஈருருளியிலே  சுற்றி வந்த போது மனக்கண்ணில் என் பள்ளிப்பருவ நினைவுகள் சாமரம் வீசிப்போயின. நகர்வலம், நாவுலர்ந்தபோதேல்லாம் நாட்டு மற்றும் நண்பர் நடப்புகளுடன் கூடிய குளிர்பானம் என்று வயிற்றிலே அலாரம் அடிக்கும் வரை சுற்றி விட்டு, உள்ளூர் உணவுக்கு பெயர்போன உணவகத்தினை வந்தடைந்தோம். ஏறத்தாள 4 மாத காலம் Vietnam இல் வாழ்ந்து வந்த காரணத்தினால் அந்த ஊர் மற்றும் உணவு பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்திருந்த நண்பி பரிந்துரைத்ததிற்கு மதிப்பளித்து கொணர்வித்த உணவு உண்மையிலேயே சுவையாக இருந்தது.

          பெயர் தெரியாத உணவு இரப்பையினை நிரப்பியதும் சற்று ஓய்வெடுக்க விடுதி திரும்பினோம். மீண்டும் சந்திப்பதற்கான நேரத்தினை குறித்துவிட்டு என் அறையினுள் புகுந்தபோது இலவச(???) இணையம் என்னை அழைத்தது. பகற்பொழுதுகளில் உறங்குவதனை விரும்பாத, இயன்ற வரைக்கும் தவிர்க்கின்ற எனக்கு இணையத்தினை விட வேறு எதுவும் அங்கு துணையாக இருக்கவில்லை. மின்னஞ்சல், பதிவு, Facebook என்று இரு மணித்துளிகளை விரயம் செய்துவிட்டு மீண்டும் இருவரும் நகர்வலம் வரத்தொடங்கினோம். ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அந்த நகரத்தினை முடிந்தவரைக்கும் முற்றுகையிட்டு முடித்து கடைசியில் வெறிச்சோடிக்கிடந்த ஒரு Restaurant இல் புத்தூக்கி அருந்துவதற்காகக் கரை ஒதுங்கினோம். பழங்கதைகள் பேசிக்கொண்டும் மேசை மீதிருந்த உருண்டைகளை ஒரு நீண்ட குச்சிக்கொண்டு இடித்துக்கொண்டும் (Snooker) புத்தூக்கி அருந்தியதில் நேரம் Usain Bolt ஆக ஓடிவிட்டது. விட்ட இடத்தில் மீதிக்கதையையும் வீதி உலாவையும் மறுநாள் காலையில் தொடரலாம் என ஏகமனதாக முடிவெடுத்து தங்குமிடம் வந்தடைந்து இரவு வணக்கம் கூறி விடைபெற்றதோடு முடிவடைந்தது அன்றைய நாள்.
       
          மறுநாள் காலையில் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்ததற்கு அமைய மீண்டும் வீதி உலாவினை ஆரம்பித்து சுமார் 11 மணி அளவில் விடுதி திரும்பி 12 மணிக்கு check-out பண்ணிக்கொண்டு அங்கேயே மதிய உணவை பொதி செய்து எடுத்துக்கொண்டு 1.30 மணிக்கு Hue இற்கு செல்லும் பேருந்தில் தொற்றிக்கொள்ள காத்திருந்தோம். அதிக நேரம் எங்களை காக்க வைக்காமல் விரைவிலேயே வந்துவிட்ட பேருந்தில் மூட்டை முடிச்சுகளுடன் ஏறி அமர்ந்து அந்த 4-5 மணி நேரப் பயணத்திற்கு எம்மைத் தயார் படுத்தினோம்.
       
          அந்த 4 மணி நேரப் பயணம் மிகவும் அழகானது. வழி நெடுக விரிந்துகொண்டே சென்ற இயற்கையின் எழிலை ரசித்துக்கொண்டே செல்லும் போது Hai Van tunnel இனூடாக செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டிருந்த அந்த 6.3 km நீளமான, தென்கிழக்கு ஆசியாவிலேயே நீளமான, சுரங்கப்பாதையினூடாகப் பயணித்தது ஒரு புதிய அனுபவம். வெறும் ஐந்தே வருடங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தப் பிரமாண்டம், கடுகண்ணாவை சுரங்கப்பாதையினை நினைவுபடுத்திச் சென்றதனை மறுக்க முடியாது.

          நகர மத்தியில் எம்மை விட்டுச்சென்ற பேருந்துக்கு நன்றி சொல்லிவிட்டு, குருநகர் மீன்சந்தையில் இருக்கும் ஈக்களை விட அதிக எண்ணிக்கையில் மொய்த்த 'தங்குமிட தரகர்களிடம்' இருந்து ஒருவழியாக எம்மை விடுவித்துக்கொண்டு இருவரும், அவரவர் பணப்பெட்டியின் எடைக்கு ஏற்ற வகையில் அருகருகில் இருந்த விருந்தினர் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டு சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, பின்னர் வழமையைப்போன்று வீதியுலா, சோமபானம் என்று பொழுதைக் கழித்துவிட்டு மறுநாள் காலையில் Hue Imperial City இனைச் சென்று பார்வையிடுவதற்கு மோட்டார்சைக்கிளினை ஒழுங்கு செய்துவிட்டு விடுதியடைந்தோம். மறுநாள் காலையில் சுமார் 9 மணி அளவில் ஆரம்பித்த எம்முடைய அந்தப் பண்டைய நகரம் காணும் பயணம் மதியம் கடந்தும் தொடர்ந்தது. இதற்கு மேல் சுட்டெரிக்கும் சூரியனை எதிர்க்க முடியாது என்ற நிலை வந்த போது, தோல்வியை ஒத்துக்கொண்டு விடுதி திரும்பினோம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் Siem Reap எனும் மனித ஆற்றலின் விஷ்வரூபத்தினைப் பார்த்த எனக்கு Hue Imperial City எந்த விதமான பரவச உணர்வினையும் ஏற்படுத்தவில்லை.

          மதிய உணவு, இளைப்பாறுதல் என்று வழமையான நேர விரயங்களை முடித்துக்கொண்டு மீண்டும் மாலையில், சூரியனின் வெம்மைக்கதிர்களுக்கு பூமி முகம் திருப்ப ஆரம்பித்திருந்ததும் மீண்டும் ஆரம்பித்தது எம்முடைய தேடல். ஏறத்தாள 20-25 நிமிட மோட்டார்சைக்கிள் பயணத்தின் பின்னர் கண்ணில் தெரிந்தது அந்தப் பிரமாண்டமான பண்டைய ஆலயம். இருந்தாலும் காலம் தாழ்த்தி வந்ததனால் ஏற்கனவே கதவடைத்திருந்த அந்த ஆலயத்தின் உள்ளே புக முடியவில்லை. ஆலய வாயிலில் நின்று அதன் அழகாய் ரசித்துவிட்டு மறுபடியும் தொடர்ந்தது எம்முடைய பயணம். அந்த மோட்டார்சைக்கிள் வாகனச் சமுத்திரத்தினுள் நீந்தி நகர மத்தியை அடைந்த போது மனது மறுப்பு ஏதுமில்லாமல் ஒத்துக்கொண்டது Vietnam இல் மோட்டார்சைக்கிள் செலுத்துவது என்பது ஒரு கலை என்பதனை.

          மறுநாள் காலை சுமார் 4 மணி நேரப் பயணத்தின் பின்னர் Phong Nha குகையினைப் பார்வையிடுவதற்காக அதன் அருகிலிருந்த கிராமத்தினை சென்றடைந்தோம். Siem Reap - Floating vilage இற்கு பிறகு மீண்டும் ஒரு படகுப் பயணம். குளிருக்குப் பச்சைக்கம்பளம் போத்தியிருந்த மலைகள், காதலனின் இதயத்தின் இடுக்குகள் எல்லாவற்றையும் நிறைத்திருக்கும் காதலியின் முகத்தைப்போல ஒரு இடம் விடாமல் நிறைந்திருந்த நீர்ப்பரப்பின் மீது நகரத்தொடங்கியது அந்த அழகிய படகு. நீச்சல் தெரியாத போதும் கொள்ளைப்பிரியம் எனக்கு நீரின் மீது. முகம் நனைத்த நீர்த்திவலைகளை துடைக்க மனமின்றி அவற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்துக்கொண்டே பயணித்ததில் ஒன்றரை மணி நேரம் ஓடிப்போனது கூடத் தெரியவில்லை எனக்கு.

          குகை வாயிலை அடைந்ததும் படகின் மோட்டாரினை நிறுத்திய செலுத்துனர் இப்பொது துடுப்புகளை கையில் எடுத்துக்கொண்டார் Malaysia வில் Ipoh வில் குகைகளினுள் அமைந்திருந்த Chinese Temples எல்லாவற்றையும் தன் கால்விரல் இடைவெளியில் நசுக்கக்கூடிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருந்தது அந்தக் குகை. வியட்னாமிய யுத்தத்தின் போது பலருக்கு பாதுகாப்பு அளித்த அந்தக்குகை பழந்தமிழர் வரலாறு போல நீண்டுகொண்டே இருந்தது. சில இடங்களில் குனிந்தும், படகின் மீது படர்ந்தும் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த பகுதி வரை சென்று திரும்ப சுமார் 2 மணி நேரம் எடுத்தது. எந்த சிற்பாச்சாரியின் உதவியும் உளிகளுமின்றி இயற்கையின் சீற்றத்தாலும் சினுங்கலாலும் சுவரெங்கும் செதுக்கப்பட்டிருந்த அந்த வாய்பேசா சிற்பங்கள், Khajuraho சிற்பங்கள் இதைவிடவா அழகாக இருந்துவிடப்போகின்றன என்ற வினாவை என் மனதில் விதைத்துச் சென்றன. நான் அங்குமிங்கும் ஓடியோடி எடுத்த புகைப்படங்கள் அந்தக்குகையின் அழகினை ஒரு சதவீதமாவது பிரதிபலிக்குமா என்ற சந்தேகத்துடன் வழிகாட்டியின் அறிவுறுத்தலின் படி படகினை அடைந்து Hue இல் நாம் தங்கியிருந்த விருந்தினர் விடுதி நோக்கிப் புறப்பட்டோம்.

        அன்றைய இரவே என் சினேகிதி விமானமேறி Hanoi சென்றுவிட மறுநாள் பொழுது Hue இல் விரயமாகக் கழிந்தது. மாலை மயங்கும் வரைக்கும் காத்திருந்துவிட்டு கடந்த இரவு நண்பன் சொன்ன யோசனையின் படி Ninh Binh செல்வதற்காக Hanoi நோக்கி சென்ற பேருந்தில் தொற்றிக்கொண்டேன். அதிகாலையில் Ninh Binh இனை  ஊடறுத்து சென்ற நெடுஞ்சாலையில் அந்தப் பேருந்து என்னை விட்டுவிட்டுச் சென்றதும் என்னை அணுகிய விருந்தினர் விடுதி சொந்தக்காரரின் அழைப்பினை ஏற்று அவரின் விடுதியிலேயே தங்கிக்கொண்டேன். சூரியன் சோம்பல் முறிக்க ஆரம்பிக்கின்ற வேளையில் காலை உணவு முடித்துவிட்டு விடுதி உரிமையாளர் ஒழுங்கு செய்து கொடுத்த மோட்டார்சைக்கிளினை எடுத்துக்கொண்டு Trang An நோக்கிப் பயணித்தேன்.

        Trang An: நகரமத்தியிலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் தள்ளியிருந்த இயற்கை அன்னையின் இன்னொரு குடில். ஓரமாக நிறுத்தி வைக்கப்படிருந்த நூற்றுக்கணக்கான சிறிய வள்ளங்களில் ஒன்றுக்குப் பணம் செலுத்தி ஏறி அமர்ந்த பின்னர் தான் தெரிந்தது படகோட்டி ஒரு பெண் என்று. சங்கடப்பட்ட மனதினை தேற்றிக்கொண்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்த காட்சியில் என் கவனத்தினை செலுத்தத் தொடங்கினேன். அனுமார் வாலாக நீண்ட அந்த நீரோடையில் நீரோடையில் மலைகளின் இடையில் அமைதியாக இருந்த அந்த நீர்த்தரையின் மீது வலுக்கிச்சென்ற அந்த வள்ளம் அந்த சூழ்நிலையினை மெய்மறந்து ரசிப்பதற்கு மிகவும் பொருத்துமானதாக இருந்தது. Phong Nha குகையினைப்  போன்று இன்னொரு குகையினை நோக்கி படகு செல்ல ஆரம்பித்தது. சூழ்நிலைகள் ஒன்றாக இருந்தாலும், உல்லாசப்பயணத்துறையால் இன்னும் சீர்குளைக்கப்படாத Trang An இன் அழகு குமரிப்பெண்ணின் அழகைப் போன்று தனித்துவமானது.

          அளவில் Phong Nha குகையினை விட சிறிதாகவும், அழகில் விஞ்சியும் காணப்பட்ட இந்தக்குகையினூடான பயணம் முன்னையதனை விட மாறுபட்டது. சுமார் 500 m  நீளம் இருந்த அந்தக் குட்டைக் குகையின் முகட்டில் தலையினை முட்டிக்கொள்ளாமல் போவதில் தான் சுவாரசியம் இருக்கிறது. துடுப்புக்கூட போட முடியாத அளவுக்கு ஒடுக்கமாக இருந்த அந்த குகையினுள் அங்கங்கே இருந்த மின்குமிழ்களின் வெளிச்சத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த காரணத்தினால் நாம் சென்ற படகினை கையினால் செலுத்திச் செல்ல வேண்டிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன். குகையின் முகட்டில் பொருத்தமான விசையினைப் பிரயோகித்து அந்த வள்ளத்தினை செலுத்திச் சென்றது மறக்க முடியாத அனுபவம். அந்தப்படகொட்டி வாழ்க்கையை முடித்துக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய, இன்னும் பூரணப்படுத்தப்படாத Bai Dinh Pagoda விற்கு சென்றேன். இதுவரை வெண்திரைகளில் மட்டும் பார்த்து ரசித்த ஒரு தோற்றத்தினை அங்கு கண்டேன். பிரமாண்டம் என்ற சொல்லின் அத்தனை எழுத்துக்களுக்கும் அர்த்தம் கிடைத்தது அங்கு. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை புத்தர் சிலைகளின் முகங்களிலும் இருந்த சாந்தம் இத்தனை படுகொலைகளைப் பார்த்தும் மாறாமல் இருப்பது பற்றி வியந்துகொண்டே சுற்றி வந்தேன்.

          வெயிலின் உக்கிரத்தில் நாக்கு மட்டுமல்லாது என்னுடைய அண்ணமும்  உலர்ந்து போனது. ஒவ்வொருபடியாக இறங்கும் போது, குறைந்துகொண்டே இருந்த என்னுடைய உடல் திடத்தினை உணர முடிந்தது. ஒரு வழியாக 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு; சாமியே ஐயப்பா!' என்று மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டு படியிறங்கி முடித்தேன். மீண்டும் மோட்டார்சைக்கிளினை உயிர்ப்பித்து  விடுதி செல்லும் வழியிலிருந்த புராதன தலைநகரத்தினைப் பார்வையிடச்சென்றேன். இன்னும் சிதிலமடையாமல் இருந்த ஓரிரு கட்டடங்களினைத் தவிர பார்த்து பரவசமடைகின்ற அளவுக்கு அங்கே எதுவும் இருக்காததனால் அதிக நேரத்தினை செலவுசெய்யாமல் வயிற்றின் வேண்டுகோளினை நிறைவு செய்ய அந்த இடத்திலிருந்து உடனடியாகவே விடுதி திரும்பினேன். விடுதி உணவகத்தில் வயிறு நிறைய உணவருந்திவிட்டு மறுநாள் அதிகாலையில் Ha Long bay செல்வதற்கான பயண ஏற்பாடுகளினை உறுதி செய்துவிட்டு கட்டில் சேர்ந்ததுடன் அன்றைய தின தேடல் முடிவடைந்தது.

          Ninh Binh இலிருந்து Ha Long bay 4 மணி நேர பேருந்து பயணத் தூரத்தில் இருக்கிறது என்று விடுதி உரிமையாளர் கொடுத்த தகவலை நம்பி காலை 5 மணியிலிருந்து காத்திருந்து 5.30 மணிக்கு வந்த பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். Vietnam செல்ல வேண்டும் என்ற ஆசையினை என் மனதில் விதைத்ததே பல ஆங்கிலத் திரைப்படங்களில் நான் பார்த்து மெய்மறந்த Ha Long Bay தான். Cambodia, Lao PDR மற்றும் Vietnam இன் ஏனைய பிரதேசங்கள் அந்த திட்டத்தில் மேலதிகமாக ஒட்டிக்கொண்டவை அல்லது ஓட்ட வைக்கப்பட்டவை. அவ்வளவுதான். என்னுடைய 3 வார சுற்றுப்பயணம் அன்று இரவு 1 மணிக்கு முடிவடைவதற்கு முன்னர் Ha Long Bay இனைப் பார்த்துவிட்டு விமான நிலையம் திரும்பி விடவேண்டும் என்ற என்னுடைய அங்கலாய்ப்பில் என்னுடைய இதயம் நான் பயணித்த பேருந்தின் இயந்திரத்தினை விட அதிகமாகப் படபடத்தது.

          மூப்பு இலவசமாகத் தரும் முகச்சுருக்கங்களைப் போல ஒழுங்கற்றுக்கிடந்த அந்தப்  பாதையில் தேனடை ஈக்களாக மொய்த்திருந்த வாகன மற்றும் சன நெரிசலில் அந்தப் பேருந்தினை வேகமாக செலுத்த முயன்று தோற்றுப்போன சாரதி அந்த முயற்சியினைக் கைவிட்ட போது என் நெஞ்சில் இருந்த கடைசிச் சொட்டு நம்பிக்கையும் வற்றிப் போனது. இருந்தாலும் கடைசி வரை முயன்று பார்த்துவிடுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மனதினைத் திடப்படுத்திய வேளையில் வந்து சேர்ந்தது உள்ளூர் நண்பனின் குறுந்தகவல். 'காலப்பிழைகள்' எதுவும் நடக்காதவிடத்து என்னுடைய பயணம்  என் எண்ணப்படியே முடிவடையும் என்று அவன் கொடுத்த நம்பிக்கை போன உற்சாகத்தினைக் கடிவாளம் கட்டி மீண்டும் இழுத்து வந்தது. நத்தையாக நகர்ந்த அந்தப் பேருந்து என் பொறுமையின் ஆழத்தினை கடைசி அங்குலம் வரை சோதித்தது.

         11 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்தினை அடைந்த பேருந்து இறந்து போக, அடுத்தது என்ன? என்று முழித்த போது 12 மணிக்கு சுவர்க்கம் சுற்றத்  தயாராக இருந்த கப்பலின்(???) முகவர் என்னை அணுகினார். அவருடன் சிறிது பேரம் பேசி, இரவு 10 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டிய என்னுடைய தேவையை அவருக்குத்  தெரிவித்து கட்டணத்தினை செலுத்தினேன். ஆசியாவின் அடையாளங்களில் ஒன்றான 'தாமதம்' அங்கும் அரங்கேறியது. 12 மணிக்குப் புறப்படவேண்டிய அந்த நீர்ப்பறவை 12.30 மணிக்கு நீந்த ஆரம்பித்தது.    

         மனதிலிருந்த படபடப்பு எல்லாம் கண்வழி புகுந்த காட்சியில் அடங்கிப்போயிற்று. அம்மா வைக்கும் முட்டைக்குழம்பில் தோன்றி மறையும் குமிழ்களைப்போல அங்குமிங்குமாக நீர்ப்பரப்புக் கிழித்து முளைத்து நின்ற பாறைக்கூட்டதினைப் பார்த்த போது  மூச்சு முட்டியது எனக்கு. முப்பது வயதில் நான் பார்த்து ரசித்த முதலாவது உலக அதிசயம் அது. வள்ளுவனையும்  கம்பனையும் இன்னும் பிற சொல்லுக்கு அதிபர்களை எல்லாம் துணைக்கு அழைக்கத் தோன்றியது எனக்கு. நிழற்படங்களிலேயே நெஞ்சைத் தொலைத்த நான் அந்த அழகினை நேரில் கண்ட போது அடைந்த நிலையை என்னவென்று சொல்வது. மனக்கண்ணில் கண்டது இன்றைக்கு என் நிஜக்கண்ணில். மனதின் ஆழம் போதவில்லையே, அத்தனை காட்சிகளையும் பதுக்கி வைத்துக்கொள்ள என்று மனது சோக கீதம் இசைத்தது. படகிலேயே மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி என்று ஒரு நான்கு மணி நேர சொர்க்கம் அது. அந்தக் குடாப்  பரப்பிலே அமைந்திருந்த மிதக்கும் கிராமத்தினை அடைந்த கப்பல் சற்று நேரம் தரித்து நின்றது.

          அந்தக் கிராமத்து மக்கள் செலுத்தும் ஓடங்களில் அங்கிருந்த குகைகளினுள் சென்று பார்வையிட முடியும் என்று  வழிகாட்டி அறிவித்தது காதில் விழுந்தது. உள்ளங்கை நெல்லிக்கனியாக கண்ணிலே தெரிந்த 'அந்தக் கண்கொள்ளாக் காட்சியை விட்டு  வேறு எதனையும் பார்க்கேன்' என்று என் கண்கள் இமைக்காது தவம் புரிந்தன. அந்த மிதக்கும் கிராமத்தின் மத்தியில் போடப்பட்டிருந்த மிதக்கும் மேடையில் அமர்ந்து கண்களுடன் இணைந்து நானும் இணைந்துகொண்டேன். 10 மணிக்கு விமான நிலையம் செல்ல வென்றும் என்ற நினைவு சுத்தமாக இல்லாமல் போயிற்று எனக்கு. நான்கு மணி நேரம் அந்தக் களப்புப் பகுதியில் காலம் மறந்து இருந்தது கப்பல் தரை தட்டிய போது தான் புரிந்தது. என்னையும் மற்றும் சிலரையும் Hanoi அழைத்துச் செல்வதற்காக இறந்குதுறையிலேயே காத்திருந்த ஒரு உள்ளூர்வாசி எங்களை சற்றுத் தூரத்தில் தரித்து நின்ற பேருந்துக்கு அழைத்துச் சென்றார். அடுத்த 5 நிமிட நேரத்தில் ஆரம்பித்தது என்னுடைய நாடுகாண் பயணத்தின் இறுதிக்கட்டப் பயணம்.

          இருள் படர்ந்திருந்த வீதியில் அடிமேல் அடி அடித்தும் நகராத அம்மியாக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நிறைந்திருக்க அதுவரை மேகம் மறைத்த நிலவாக மறைந்திருந்த என்னுடைய படபடப்பு Ha Long Bay இனுடைய அழகு ஏற்படுத்திய பிரமையின் பின்னிருந்து மெதுவாக வெளியே எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. நத்தை கூடத் தோற்றுப்போகும் அளவுக்கு மெதுவாக நகர்ந்த நான் பயணித்த பேருந்து 3-4 மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தினை 5 மணி நேரத்தில் கடந்து Hanoi இன் Old Quarters பகுதியினை வந்தடைந்தது. Lao ற்கு  சென்ற போது விட்டு சென்ற என்னுடைய இன்னொரு பயணப்பொதியினை பெற்றுக்கொள்வதற்காக நான் இப் பயணத்தின் முதல் நாள் தங்கி இருந்த விடுதியினை  நாடிச் சென்றேன். பொறுப்பாளருடன் பேசி என் பொதியினைப் பெற்றுக்கொண்டு  வரவேற்பு மண்டபத்திற்கு வந்தபோது என்னை அழைத்துச் செல்ல என் விடுதிக்கு இன்னும் 20 நிமிடத்தில் வருவதாகக்  கூறி என் நண்பன்அனுப்பிய குறுந்தகவல் எனக்குக் கிடைத்தது.

          20 நிமிடம் கழித்து சில நிமிடங்கள் கழிந்த பின்னர் விடுதி வாயிலில் வந்து நின்ற வாடகைக்காரில் பொதிகளினைத் திணித்துவிட்டு ஏறி அமர்ந்த போது  நண்பன், வண்டிச்சாரதிக்கு எங்களின் சிநேகிதியின் வீட்டுக்கு வழி சொல்லிக்கொண்டிருந்தான். அடுத்த 10 நிமிட நேரத்தில் சிநேகிதியின் வீடு அப்படியே விமான நிலையம் என அடுத்த ஒரு மணி நேரம் பயணத்தில் முடிந்தது. கடைசி மரியாதையாக எங்களிடம் இருந்து அந்த வாடகைக்காரிற்கான கட்டணத்தினைப் பெற்றுக்கொள்ள மறுத்த நண்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு காகிதக்கடமைகள் முடிக்க முன்னேறினோம். அதிக சனக்கூட்டமில்லாது இருந்த விமான நிலையத்தில் சங்கடம் எதுவுமின்றி கடைசி மணித்துளிகளை செலவு செய்துவிட்டு 45 நிமிட நேரங்கள் தாமதித்துப் புறப்பட்ட விமானத்தில் ஏறி அமர்ந்ததுடன் முடிந்தது என்னுடைய அந்த மூன்று வாரப்பயணம்.

Comments

  1. Thank you for sharing it, had a feeling of visiting these places with your sentences, keep visiting the world and let me join with you here..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மூன்று வாரங்களில் மூன்று தேசங்கள்...

என் நாட்குறிப்பிலிருந்து...