என் நாட்குறிப்பிலிருந்து...

கண்ண மூடி யோசிக்கும் போது என் மனக்கண்ணில மங்கலாவும் பிரகாசமாவும் தெரியிற காட்சிகளுக்கு எழுத்துக்கள் எண்ட உருவமும், உணர்வு எண்ட உயிரும் குடுக்கிற ஒரு எத்தனிப்பு!

இந்த இருபத்தெட்டு வருஷ, ஒரு மாச, இருபது நாள் (2010/10/05) வாழ்க்கையோட ஒவ்வொரு செக்கனிலயும் கொஞ்சம் கொஞ்சமா சேகரிச்ச இன்னும் செல்லரிக்கப்படாத நினைவுகள இரை மீட்டுப்பார்க்கிற ஒரு இடம் தான் இந்த "என் நாட்குறிப்பிலிருந்து...".

இது வரைக்கும் வாழ்க்கையில கடந்து வந்த பருவங்களை அசை போட்டுப் பார்க்கிறதில அப்பிடி ஒரு சந்தோசம், நிம்மதி. இதுவரைக்கும் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற, இனி வாழப்போகிற ஒவ்வொரு நொடியுமே ஒரு பருவம் தான். அப்பிடியான ஒரு வாழ்க்கைய இளமை, முதுமை எண்ட ரெண்டு வார்த்தைகளுக்குள்ள அடக்குறதுக்கு ஏனோ என் மனசு இடம் குடுக்கேல. கடந்து வந்த ஒவ்வொரு நொடியும் எதோ ஒரு பாடத்த கத்துகுடுத்து இருக்கு எண்டத எவராலும் மறக்க முடியாது. ஒவ்வொரு மரமும் போதி மரமா எண்டு எனக்கு தெரியாது ஆனா ஒவ்வொரு நொடியும் ஞான நொடிகள் எண்டதில எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அப்பிடியான ஒரு வாழ்க்கைய வாழ்ந்துகொண்டு இருக்கிற என்னோட வாழ்க்கையில நடந்த நிகழ்வுகள அந்த நிகழ்வுகள் மூலமா எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள, எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள முடிஞ்ச வரைக்கும் (எப்படா முடியும் எண்டு நீங்க நினைக்காத அளவுக்கு) சுவைபட தரவேணும் எண்ட முயற்சி. இவனோட வாழ்க்கைய தெரிஞ்சு நாங்க என்ன பண்ணப்போரம் எண்டு நீங்க புறுபுறுக்கிறது எனக்கு கேட்டாலும் வழமையைப் போல காதில வாங்காம கருமமே கண்ணாக....

இந்த இருபத்தெட்டு வருஷத்தோட ஒவ்வொரு நொடியும் எனக்கு "கல் மேல் எழுத்துப்போல" நினைவில இருக்குது எண்டு சொன்னா நீங்கள் எல்லாரும் கையில அகப்படுரதால அடிப்பிங்கள் எண்டதில எனக்கு எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்ல. காலம் எண்ட காற்றால கலைக்கப்படாத, என் நினைவு என்ற மணல்வெளியில நான் வரைந்த, மற்றவர்களால் வரையப்பட்ட பலவித கோலங்கள அவற்றோட உண்மையான தோற்றம் 
மாறாத விதத்தில எழுத்தேட்டில பதிவு செய்கிற ஒரு முனைப்பு.

எங்க ஆரம்பிக்கிறது எண்டு தான் ஒரே குழப்பமா இருக்கு. சரி...
காவடி எடுக்கிறது எண்டு தீர்மானிச்சுட்டன் ஆடிமுடிக்காம இறக்கிவச்சா நல்லாவா இருக்கும்(?). தொடங்கிறது எண்டு முடிவு பண்ணியாச்சு, இனிம என்ன கலாய்க்க வேண்டியது தான்.... விஜய் மட்டுமில்லிங்க, நானும் தான் ஒருதரம் முடிவு பண்ணி இறங்கிட்டா, என் பேச்ச நானே கேக்கமாட்டன்.

சரி, சட்டுன்னு ஒரு இருபத்தெட்டு வருஷம், அஞ்சு மாசம், முப்பது நாள் பின்னுக்குப் போவமா? அட அப்பிடிப்போனா தானுங்க கணக்கு சரியா இருக்கும். கூட்டிக்கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும். அட அண்டைக்குத்தான் இந்த மேதை பிறந்தது அவதரித்தது எல்லாமே... (மத்தவங்க கஷ்டத்த களையிறனோ இல்லையோ மத்தவங்களுக்கு கஷ்டம் குடுக்காம இருக்கிறன் எண்டது என்னோட நம்பிக்கை). அந்த நாள்ல இருந்து ஒரு ஆறு வருஷத்துக்கு பெரிசா எதுவுமே நினைவில இல்ல. ரொம்ப சின்ன உலகமா இருந்திருக்குமோ???? சரி விடுங்க. 1988 ல ஆரம்பிச்சுது நம்ம பயணம். ஓடிட்டே இருக்கிறன். எங்க, எப்ப நிக்கப்போறன் அல்லது நிறுத்தப்படப்போறன் எண்டது சரியா தெரியல. தெரிஞ்சாலும் சுவாரசியம் இருக்காது இல்லையா? 

எல்லாரையும்(??) போல நானும் பட்டப்படிப்பு எல்லாம் படிச்சு ஒரு "டாக்டர்" மேர்வின் சில்வா மாதிரியோ இல்ல "டாக்டர்" விஜய் (நம்ம இளைய தளபதி தானுங்கோ) (இதில வஞ்சப் புகழ்ச்சி எதுவும் இல்லை எண்டத சமூகத்துக்கு தாழ்மையா தெரிவிச்சுகிறன்) மாதிரியோ வரவேணுமெண்டு என்னைப் பெத்தவங்க ஆசைப்பட்டு St. John's college ல சேர்த்துவிட்டாங்க. சரி நானும் போனாப்போகட்டுமெண்டு படிக்க நெனைச்ச காலமும் இருக்குது. இருந்தாலும் நான் ரொம்ப சுட்டி + கெட்டி. அதனால இந்த படிக்கிற வேலை எல்லாம் என்னோட சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது எண்டத மிக சொற்ப காலத்திலேயே புரிஞ்சுகொண்டு கடைசிக் கதிரைக்கு சுய விருப்பத்தோடயே மாற்றலாகிட்டன். இருந்தாலும் நான் எங்கட தமிழ் கூட்டமைப்பு பா. ஊ (பாராளுமன்ற உறுப்பினர்கள்) மாதிரி இல்லப்பா. சும்மா வாயை மூடிட்டு எல்லாம் இருக்க மாட்டன். முக்கியமான விஷயங்களுக்கு எல்லாம் வெளிநடப்பு செய்ய மாட்டன். படிப்பு விஷயத்த தவிர மத்த எல்லா விஷயத்திலையும் ஆர்வமா கலந்துகொள்ளுவன். 

நட்பு எண்டா என்ன எண்டு விளங்கிக் கொள்ளத்தொடங்கினது இந்தக் காலகட்டத்தில தான். அந்த அரைக்காற்சட்டைக் காலத்தில அதாவது கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னால கண்டு பிடிச்சவங்க தான் இப்பவும், இண்டைக்கும் என்னுடைய நண்பர்கள் எண்டது எங்கயும் எப்பவும் மார்தட்டி சொல்லுற, சொல்லக்கூடிய விஷயம். நட்பப்பத்தி பேசி நாளைக்களிக்காம சட்டு புட்டு எண்டு விஷயத்துக்கு வா எண்டு நீங்க புறுபுறுக்கிறது ராப் (rap)  இசை மாதிரி இரைச்சலா இருந்தாலும் முழுசா நிராகரிக்க முடியாம, சரி நாக்கு களைக்கிற அளவுக்கு நட்பப்பத்தி கதைக்கிறதுக்கு நமக்கெண்டு ஒரு சந்தர்ப்பமும் நாலு கேனைப்பயலும் மாட்டாமலுமா போயிடும் எண்டு என் பிஞ்சு மனச நானே தேற்றிக்கொண்டு நாலு மாசமா நகராம இருந்த பதிவுகளுக்கு ஒரு மறு ஜென்மம் குடுக்கலாம் எண்டு நிமிர்ந்து உட்கார்ந்தா சுத்திவர கொஸ்டரிக்கன் (Costa Rican) பொண்ணுங்க. எப்பிடி சொல்றது கவனக்கலைப்பான் எண்ட வார்த்தைக்கு மறு அர்த்தம் எண்டு மண்டையில நடு அடிச்சு சத்தியம் பண்ணலாம். நாட்டுக்கோழி அடிச்ச காலம் போய் இப்ப வெளிநாட்டுக்கோழி அடிக்கிறியா? அதவேற பகிரங்கப்படுத்தி பசங்க மனசில பொறாமையையும் உன்னைப் பெத்தவங்க வயித்தில புளியையும் கரைக்கிறியா எண்டு நீங்க திட்டுரதாலையும், அதுக்கென தனியா ஒரு பதிவு தொடங்கிற நோக்கம் இருக்கிற காரணத்தாலயும், பருவ வயசுக்கோளாற பக்குவமா திட்டி, அடக்கி வச்சுக்கொண்டு(??), பாதி மனச பருவப்பெண்களிடத்தில விட்டுட்டு மீதி மனசோட மீண்டும் பள்ளிக்கு நடையைக்கட்டுறன். 

நானும் எத்தனையோ தரம் என் மூளையிண்ட கடைசிப் பக்கங்கள தூசுதட்ட முனைஞ்சாலும் எதுவுமே தெளிவாக மாட்டான் எண்டு வெட்ட வெட்ட முளைக்கிற நகம் மாதிரி திரும்ப திரும்ப அடம் பிடிக்குது. ஒரு வேளை அந்தக் கால கட்டத்தில நான் ரொம்ப நல்லவனா இருந்திருப்பனோ? (நீ எப்பவுமே நல்லவன் தானேடா எண்டு பிரசங்கம் செய்யுற உங்களோட நல்ல மனசுகள மெச்சிக்கொண்டு கதைய(!!!) தொடருரன்) நாலாம் ஆண்டு படிக்கும் போது ஒரு நாள் வாத்தியார் ஒருவர் நாகரிக பாஷை, அது தானுங்க இங்கிலீசு, சொல்லிக்குடுக்க படாதபாடுபட்டுக்கொண்டு இருக்க, பக்கத்தில இருந்த என் கிராமத்து நண்பனோட காதில "நமக்கு தமிழே அரைகுறை, இதில இது வேறையா?" எண்டு நான் கிசுகிசுக்க, அத அந்த ஷேக்ஸ்பியரோட தத்துபிள்ளை சோடாபுட்டிக் கண்ணாடிக்குள்ளால பார்த்துட்டு, எங்கள அவசரமா கிராமத்த விட்டு, sorry, sorry வகுப்ப விட்டு ஒதுக்கி வச்சுட்டாரு. அது ஒண்டும் புதுசில்ல எனக்கு. நான் வகுப்புக்கு உள்ள இருக்கிற நாட்களா விட வெளியில இருக்கிற நாட்கள் தானுங்க ரொம்ப அதிகம். இருந்தாலும் அண்டைக்கு விதி கொஞ்சம் அகோரமாவே என்னோட விளையாடிட்டுது. பரியோவானில 1991 க்கு முதல் ஆரம்ப பாடசாலையில படிச்சவங்களுக்கு அவங்களோட அம்மா அப்பாவோட பெயர்கள் மறந்தாலும் மறக்கும் இவரோட பெயர மறக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. "அப்பற்ர பேர மண்ணாக்காத" எண்டது அவரிட்டப் படிச்ச எல்லாருக்கும் பாடையில போகும் வரைக்கும் நினைவு இருக்கும். அவர் கொண்டு திரியிற பிரம்புக்கும் அவருக்கும் பெரிசா நிறை வித்தியாசம் இருக்காது எண்டது அடியேனோட கணிப்பு. இருந்தாலும் ஆசான் ரொம்ப திடகாத்திரசாலி. சிங்கப்பூர்க்காரன் கசையடி பத்தி இவரிட்ட தான் கேட்டுத் தெரிஞ்சு கொண்டிருப்பான் எண்டது என்னோட அசைக்க முடியாத நம்பிக்கை. ஒவ்வொரு அடியும் அணுகுண்டு மாதிரி இறங்கும். அவரிட்ட அடி வாங்கினா, ஒரு ரெண்டு நாளைக்கு "அந்த" இடத்தில அம்மை வந்த மாதிரி வலிக்கும். விதி விளையாடினதப் பத்தி சொல்லிட்டிருந்தன் இல்லையா. அந்த விதி இவர் உருவத்தில தான் விளையாடிச்சுது. அந்தக் காலத்தில ராஜாக்கள் நகர் வலம் வந்த மாதிரி இவர் "வகுப்பு வலம்" வந்தப்ப, காவல் பூதங்கள் மாதிரி வாசலிலேயே நிண்ட இல்ல, இல்ல, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எங்கள அப்பிடியே கைது செய்து அவரோட சித்திரவதைக்கூடத்துக்குள்ள கூட்டிட்டுப்போய் செய்த அர்ச்சனை + அபிஷேகம் அடுத்த ஜென்மத்திலையும் மறக்காது. தோலை உரிக்கிறதெண்டா என்னவெண்டு நான் செய்முறையோட தெரிஞ்சு கொண்டது இவரிட்ட இருந்து தான். அப்பிடி அபிஷேகம் பண்ணும் போது அவர் குடுத்த situation song இந்த நிமிஷம் வரைக்கும் தேவாவோட கானா மாதிரி சும்மா சுருதி தப்பாம என்ட காதில கேட்டுக்கொண்டு இருக்கு. "இந்த மண் எங்களின் சொந்த மண்" எண்டது தான் அந்த பாட்டு. இந்த பாட்டோட அடி முடி தேடி வேண்டாத வம்ப விலைக்கு வாங்க நான் தயாரில்ல. இந்தப் பாட்டுக்கும் நான் விபரிச்ச சூழ்நிலைக்கும் என்னடா சம்பந்தம் எண்டு இல்லாத மூளையைக் கிளருற மூளைசாலிகளே, நான், என் நண்பன், எங்க ரெண்டு போரையும் தோலுரிச்சு ஊறுகாய் போட்ட எங்களோட தலைமை வாத்தியார், மூண்டு பேருமே ஒரே ஊரை சேர்ந்தவங்க எண்டது தான் அவர் அந்த பாட்ட தெரிவு செய்ததுக்கான காரணம். 

அதே வருஷம், என்னோட சுக துக்கத்துக்கு அந்த வருஷம் பொறுப்பா இருந்த அந்த நல்ல மனசுக்காரி, அது தானுங்க வகுப்பாசிரியை, அடுத்த வருஷத்தில இருந்து என்னையும் ஒரு நாய்-பிடிகாரனா, கௌரவமா சொல்ல வேணும் எண்டா "மொனிட்டரா" ஆக்குறதுக்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பத்தி சொன்னாங்கள். அண்டைக்கு தான் முதன் முதலா தெரிஞ்சுகிட்டான் நம்மையும் இந்த உலகம் அவதானிக்குது எண்டு. அண்டைக்கு ஆரம்பிச்சது தான் இந்த அடாவடித்தனம் இண்டைக்கு வரைக்கும் ஒரு குண்டுமணி அளவுக்குக் கூட குறையல. அடம்பன் கோடியே திரண்டால் மிடுக்கு எண்டு இருக்கும் போது நான், என்ட சிநேகிதர்கள் கூட "திரண்டால்" எவ்வளவு மிடுக்கு இருக்கும்? அதுக்கும் மேல அப்ப தலைமை நாய்-பிடிகாரனா இருந்தவனும் என்னோட சிநேகிதம். ஆள் பலம், அதிகார பலம் - இதுக்கு மேல என்ன வேணும் ஒருத்தன் அடாவடித்தனம் பண்ணுறதுக்கு. அப்பிடியே ஒரு வருஷம் அமளிதுமளிப்படுத்திட்டு அடுத்த கட்டத்துக்கு தாவினன். அது தானுங்க ஆறாம் ஆண்டு. புது நிர்வாகம், புது வாத்திமார், புது சூழ்நிலை எண்டு நிறைய "புதுசுகள்" வாழ்க்கையில நுழைஞ்சாலும், கனடாவுக்குப் போனாலும் காக்காவோட கலர் மாறாது எண்ட மாதிரி குணமும் குழப்படியும் மாறேல எண்டது நகக்கண்ணுக்கும் புலனாகின விஷயம்.      

அது என்னவோ தெரியேல, நான் எந்தப் "பிரிவு"க்குப் போனாலும் எனக்கே  எனக்காய் வந்து அமையுற "பிரிவுத்" தலைமை ஆசிரியர்கள் மட்டும் உடுப்போட சேர்த்து உடம்பையும் iron பண்ற மாதிரி எப்பவும் விறைப்பாவே இருப்பாங்க. அவங்களையும் குற்றம் சொல்ல முடியாது. என்னை சமாளிக்கவே இல்லாத கடவுள் எல்லாம் கும்பிட வேணும். என்னை மாதிரியே சில நூறுகள சமாளிக்கிறதெண்டா உடம்ப மட்டும் இல்லை உணர்வு + உயிர் எல்லாத்தையும் சேர்த்து iron பண்ணினா தான் முடியும். எலி அடிச்சுக் களைக்காதவன் இருக்கலாம் ஆனா எங்கள மேய்ச்சு களைக்காத வாத்தியார் எண்டு எவருமே இருக்க முடியாது எண்டது 1993 ல இருந்து 2001 வரைக்கும் கூடவே இருந்து கண்டு, கேட்டு, உற்று, அறிந்த எல்லாருமே ஒத்துக்கொண்ட, ஒத்துக்கொள்ளுற விஷயம். இவன் என்னடா எப்ப பார்த்தாலும், பள்ளிக்கூடம் பற்றியே கதைச்சுக்கொண்டு இருக்கிறானே எண்டு நினைக்காதிங்க. அப்ப என்னோட உலகம் ரொம்ப சின்னது. வீடு + பள்ளி. அவ்வளவு தான். வீட்டில மற்ற எல்லாரையும் மாதிரி நானும் ரொம்ப நல்ல பிள்ளை. இந்தப்பூனையும்... வேணாம் இது ரொம்ப பழசு, இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி சொல்லவேணும் எண்டா, "இந்த MP யாவது Mahinda வ எதிர்த்து ஏதாவது சொல்லுறதாவது" எண்ட மாதிரி ரொம்பப் பௌவியமா இருந்து கொள்ளுவன். அதனால தான் என்னோட நாட்குறிப்பு பள்ளிக்கூட நினைவுகள் + நிகழ்வுகள சுத்தி வட்டமடிக்குது எண்டத சமூகம் கருத்தில எடுத்து கண்டுகொள்ளாம விட்டுட வேணும் எண்டது அடியேனோட வேண்டுகோள். எனக்கு மிகவும் விருப்பமான சில வருடங்கள் இருக்குமெண்டா இந்த வருடம் (1993), அதில ஒண்டு. ஏனெண்டா, இண்டைக்கு வரைக்கும் என்னோட இருந்து என்னோட சேர்ந்து பதறுற, பரவசப்படுற ரெண்டு நண்பர்கள எனக்கு குடுத்தது இந்த வருஷம் தான். வாழ்க்கைத் தேவைகள் எங்கள பல வருஷங்களுக்கு முன்னமே இடம் மாத்தி வச்சுட்டாலும், யார் செஞ்ச புண்ணியமோ, இதயமும் இணையமும் எங்கள இண்டைக்கு வரைக்கும் ஒட்டியே வச்சிருக்குது. இந்த ரெண்டு பேர  விட இன்னும் சில நண்பர்கள எனக்கு நெருக்கமா இந்த வருஷம் உருவாக்கிக் கொடுத்தது எண்டத சொல்லாம விட்டா இந்த "நாட்குறிப்பின்" நாயகர்கள் பட்டியல் முழுசாகாது. அப்பிடியே தனிப்படை அமைச்சு, ரணகளப்படுத்திக்கொண்டே சராசரியாப் படிச்சதால, படிப்பிச்சவங்களாலும்  படிக்கவச்சவங்களாலும் எங்களைத் திட்ட முடிஞ்சுதே தவிர வெறுக்க முடியேல. 

நான் எப்பவுமே பள்ளிக்கூடம் போகமாட்டன் எண்டு அடம் பிடிச்சதில்ல எண்டு என்னோட அம்மா ரொம்ப பெருமையா சொல்லுவா. எனக்கு அது சரியா  நினைவில்லை. ஆனா ஒரு கால கட்டத்தில எனக்கும் என் சகபாடிகளுக்கும் பள்ளிக்கூடம் போறதெண்டா அப்பிடி ஒரு சந்தோசம். நாட்டு சூழ்நிலை மற்றும் வேறு சில திண்டாட்டங்களால வெளியில சுத்துறது எண்டா என்னவெண்டு தெரியாமலே, கிணத்து தவளையா ("Bunker  சிறுவனா" எண்டு சொன்னாத்தான் இன்னும் பொருத்தமா இருக்குமோ?) வாழ்ந்துட்டன். அப்பிடி ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்த எனக்கு பள்ளிக்கூடம் தான் உலகம்.    போதுமடா பள்ளிக்கூட புராணம் பாடினது விசயத்துக்கு வாடா எண்டு நீங்க திட்டுரதாலயும் இத வாசிக்கப்போறதும் நீங்க தான் எண்டதாலயும் இதோட கல்லூரி சம்பந்தமான காரண காரியங்கள இதோட முடிச்சுக்கொண்டு matter க்கு  வாறன். என்னடா இவன் நண்பர்கள் நண்பர்கள் எண்டு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுறானே ஆனா அவங்களோட பெயருகள மட்டும் மறந்துபோய்க்கூட சொல்லுறான் இல்லையே எண்டு தண்ணி அடிக்காமலே தலை சுத்துற ஆசாமிகளே, நான் பெயருகள சொல்லி அது அவங்களோட வாழ்க்கையில எந்தவிதமான களேபரத்தையும் (அப்பிடி எதுவும் பெருசா நாங்க செய்யேல; இருந்தாலும் ஒரு முற்பாதுகாப்புக்காக)  

பக்கங்கள் புரட்டப்படும்....

Comments

Popular posts from this blog

மூன்று வாரங்களில் மூன்று தேசங்கள்...

மீண்டும் Manila வில்...

மூன்று வாரங்களில் மூன்று தேசங்கள்...