மீண்டும் Manila வில்...
வரவே கூடாது என்று எதிர்பார்த்த அந்தநாளும் வந்து செல்வந்தன் வீட்டுப் பணப்பெட்டியாய்க் கனத்த மனத்துடன், தொப்புள் கொடியை மறுபடியும் கத்தரித்து Manila வந்து இறங்கிய போது நேரம் நள்ளிரவு கடந்திருந்தது. காகிதக்கடமைகள் முடித்து காவல்கள் தாண்டி விமான நிலையம் விட்டு வெளியே வந்த போது உறவுகள் பசியின்றித் தூங்க வேண்டும் என்பதற்காக தூங்காமல் கடமை புரியும் வாடகை வண்டிச் சாரதிகளின் வரவேற்பு, பயணம் இன்னும் முடியவில்லை என்பதை பக்குவமாகச் சொல்லியது. சினேகிதி ஒழுங்கு செய்து கொடுத்த வாகனத்தில் இன்னும் மூன்று சகமாணவர்களுடன் சாய்ந்து அமர்ந்த போது வண்டிச்சாரதி உள்ளூர்ப்பாசையில் சொன்னது என்னவென்று அவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நிறுத்திய போதுதான் புரிந்தது. எண்ணெய் நிரப்பிய வாகனமும் சிறுநீர் களித்த சகமாணவனும் "பாகங்கள்" மறைத்து புத்துயிர் பெற்ற போது, இன்னும் ஒரு மணி நேரத்தில் உறங்குமிடம் வந்துவிடும் என்ற எண்ணம் கொடுத்த உவகையை, உயிருடன் எரித்தது உதடு பிரித்த வண்டிச்சக்கரம். வாகனம் மாற்றி மனை வந்த போது மனிதன் வகுத்த காலக் கணக்கில் இன்னும் சில மணித்துளிகள் செலவாகி இருந்தது.
கண்டங்கள் கடந்து வந்த களைப்பு கட்டிலை காதலியாகக் காட்டியதில் அதன் மீது படரத்தோன்றியது எனக்கு. ஆனால் புதிதாக காதல் வசப்பட்டவன் மாதிரி எத்தனை தரம் புரண்டு படுத்தாலும் தூக்கம் மட்டும் வரவே இல்லை. உலகத்தினுடைய ஒரு பக்கத்தில இருந்து இன்னொரு உலகத்துக்கு பறந்தது இது இரண்டாவது தடவை. ஆனால் இந்த Jet Lag மட்டும் எனக்கு அறிமுகமாகவே இல்லை. சமூக இணையத்தளத்தில் சில மணி நேரமாக, பல மணித்தியாலங்களுக்கும், பல மாதங்களுக்கும் முன்னர் விட்டுப்பிரிந்த உறவுகளுடன் உரையாடிவிட்டு யன்னல் திரையினை விலக்கிப் பார்த்த பொழுது Costa Rica வில் சந்திப்போம் சொன்ன சூரியன், நலம் விசாரிக்கக் காத்திருந்தான். நடுச்சாமத்தில் நச்சரிக்கத்தொடங்கிய எனது வயிறு இப்போது என்னை வெளிப்படையாகவே திட்டத்தொடங்கியது.
(பொதுக்)குளியலறையில் குளித்து முடித்து, ஒரு "தனிக்"குழு அமைத்து வயிற்றின் முறைப்பாடு தொடர்பில் தீர்மானம் எடுக்க எத்தனித்த போது, அழைப்பு மணி என்னை அவசரமாகத் தடுத்தது. வியப்புடன் திறந்தபோது, உண்ண மற்றும் உறிஞ்ச எனக்குப்பிடித்த வகையறாக்களுடன், 8 மாதங்களின் முன்னர் இதே மண்ணில் சந்தித்த உறவு சிரித்த முகத்துடன். அந்த நொடி, நான் வாழும் போதே சேகரித்துக்கொண்டிருக்கும் என் சொர்க்க நிமிடங்களின் ஒரு பாகம். சுக நலம் விசாரித்து பொரித்த கோழியையும் கூடவே கொண்டு வந்த குளிர்பானத்தையும் அருந்தி முடித்த போது "அப்பாடா" என்று இருந்தது. அலசிய கையின் ஈரம் காய முன்னர், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஒரு ஆனந்தக் கலந்துரையாடல். அரைமணி நேரம் கழிந்த பின்னர், வயிற்றில் இருந்த பாரம் கண்ணிமைக்கு இடம் மாறியது. நன்றி சொல்லி விடை கொடுத்து விட்டு சாய்ந்து அமர்ந்த நான் கண் விழித்துப் பார்த்த போது மரணம் என்னை ஒரு நாளினால் நெருங்கி இருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் வரிகளை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்த தனியார் விடுதியிடமிருந்த எப்படியாவது என்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமென்ற முனைப்புடன் / நினைப்புடன் ஆரம்பித்தது Manila வில் என்னுடைய இரண்டாவது நாள். காலைக்கடமைகளை முடித்து, காலையில் வருவதாக வாக்களித்த நட்பினை வரவேற்க அவசர அவசரமாகத் தயாரான போது இராட்சசப் பசி என்னை அநியாயத்துக்கு மிரட்டியது. காலைவணக்கம் சொன்ன நட்புடன், வாசற்படியிலேயே காத்திருக்கும் Tricycle இனை ஒழுங்கு செய்து பிரதான வீதிக்கு வந்து Philippines இன் பல அடையாளங்களில் ஒன்றான Jeepney இல் ஏறி அமர்ந்து கடந்த ஆண்டினை விட 1.50 இலங்கை ரூபாவினால் அதிகரித்திருந்த கட்டணத்தினை செலுத்தி, புனித வாரத்தின் (Holy week) காரணமாக, ஏழை வீட்டுப் பாயாசத்தில் மரமுந்திரிகை போல அங்கொன்றும் இங்கொன்றுமாக திறந்து காணப்பட்ட உணவுச்சாலைகளில் எனக்குப் பொருத்தமானதை தேடிப்பிடித்து அடைந்த போது, பசி அரக்கன் என் இரப்பையில் பாதியைத் தின்றிருந்தான். பசி மறைத்து வரிசையில் நின்று உணவுப்பட்டியலை அலசிய போது Burgher இல்லாத Mc Donanlds என்ற உண்மை அறிந்து பதைத்தது என் மனது. பல தடவை பார்த்த போதும் பன்றியைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை அங்கு. களைத்துப்போன கண்களில் கடைசியாகச்சிக்கியது Hot Cake எனப் பெயர் மாற்றம் பெற்றிருந்த pan cake. ஒரு தரத்திற்கு இரண்டு தரம் என்கூட இருந்த உள்ளூர் நண்பனின் உதவியுடன் உணவின் உள்ளடக்கத்தினை உறுதிசெய்துகொண்டு, பெயர் மாற்றம் ஏற்படுத்திய நகைப்பினை எனக்குள்ளேயே மறைத்துக்கொண்டு, உணவு பெற்று இடம் தேடி உட்கார்ந்த போது, வயிற்றுக்கும் வாய்க்கும் இடையில் எதற்காக இந்த வேண்டாத இடைவெளி என்று எண்ணத்தோன்றியது. Pan cake, Pan cake syrup, Butter, Hot Chocolate என பல வகையறாக்களை லஞ்சமாகக் கொடுத்து இரப்பையுடன் சமரசம் செய்து இருவரும் தயாரானோம் வீடு தேடும் படலத்திற்கு.
மறுபடியும் Jeepney ஏறி என்னுடைய அடுத்த 2 1/2 மாத காலத்தினை கழிக்க இருக்கும் Ateneo De Manila University சுற்றாடலினை அடைந்து கண்களில் பட்ட முதலாவது "வீடு வாடகைக்கு உண்டு" அறிவிப்புப் பலகைக்குச் சொந்தமான வீட்டுக் கதவினைத் தட்டியபோது சிரித்த முகத்துடன் வரவேற்ற Filippino அம்மையார் காட்டிய வீடு என் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாததினால் நன்றி சொல்லி புறப்பட ஆயத்தமான போது இன்னொரு இடத்தின் முகவரி சொல்லி, அவரே அழைத்துச்சென்றார். புதிதாகக் கட்டப்பட்ட Loft Apartment இல் இருந்த அந்த மனையை எனக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. கணவனை இன்னொரு பெண்ணுடன் பார்த்த மனைவியின் கோபம் போல மிகக்கொடுமையாகச் சுட்டுக்கொண்டிருக்கும் Manila வெயிலுடன் யுத்தம் செய்ய மிகவும் பொருத்தமான ஒரு இடமாக அது இல்லாத போதிலும், எனக்கென தனிக்குளியலறை, சமையலறை, மாடியிலமைந்த படுக்கையறை என என் தேவைகளை நிறைவு செய்யும் என அந்த மனை கொடுத்த உத்தரவாதம், எனக்கும் அந்த மனைக்குமிடையிலான உறவினை உறுதி செய்தது. இந்தக்கணத்தில் வீட்டுச் சொந்தக்காரர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். மனிதக் கணக்கின்படி முதுமையானவர்கள், மனதுக்கணக்கின் படி மிக இளமையானவர்கள். "எங்களுக்கு சிரித்த முகத்துடன் இருப்பவர்களை மிகவும் பிடிக்கும்" என்று சொன்னவர்களை எனக்கும் பிடித்துப்போயிற்று. "உங்கள் நாட்டினைச் சிதைத்த போர், உங்கள் நகைச்சுவை உணர்வுகளை ஒன்றும் செய்துவிடவில்லையே?" என்று அவர்கள் கேட்ட போது இதயத்தில் வலியை சற்று அதிகமாகவே உணர்ந்தேன். என் சிரிப்பினைப் பிடித்ததனால் என்னைப் பிடித்துப்போனது அவர்களுக்கு. அவர்களது மகனும் ஒரு சட்டத்தரணி என்பது எம் பிணைப்புக்கு மேலதிக வலுச்சேர்த்தது. ஒப்பந்தம் முடித்து, பணம் கைமாற்றி, அந்தக் கொள்ளைக்கார விடுதியிலிருந்து விடுதலையாகி, "எனது" வீட்டிக்கு குடிபுகுந்தபோது சுகப்பிரசவம் கிடைத்த ஆறுதல் எனக்கு. உடல் நனைத்த வியர்வை கழுவி Cubau இலிருந்த Gateway Mall செல்ல வாடகைக்காருக்கு காத்திருந்த போது, சந்தித்த நண்பனை, சரியான நேரத்தில் வந்த வண்டியில் அள்ளித்திணித்துக்கொண்டு mall இனை அடைந்து தொலைபேசி இணைப்பு, இணைய இணைப்பு என அத்தியாவசிய(?!?!?) பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த போது களைப்பும் தூக்கமும் என்னை ஓட ஓட விரட்டின. அவற்றிற்கு அடி பணிந்து சில மணித்துளிகள் இளைப்பாறிவிட்டு மறுபடி இரவு உணவிற்காக வெளியில் சென்று வீடு திரும்பியதுடன் முடிந்தது என்னுடைய இரண்டாம் நாள்.

கடந்த இரவு, 9 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டதனால் இன்று காலை 6 மணிக்கு எல்லாம் அலாரம் இன்றியே கண் விழிக்க முடிந்தது. அன்றாட கடமைகளை முடித்துக்கொண்டு அடுத்தது என்ன என்று யோசிக்கும் போது “தேவைகள்" ஒவ்வொன்றாக நினைவுக்கு வரத்தொடங்கின. வீட்டிற்கு அருகாமையில் இருக்கின்ற Riverbank Mall இற்கு சென்று மனப்பட்டியலில் இருந்த பொருட்களை தேடிப்பிடித்து வாங்கியதில் கழிந்தது சில மணித்துளிகள். அப்படியே மதிய உணவையும் முடித்துக்கொண்டு மீண்டும் என் மனைக்கு வந்த போது தனிமை என்னை சுகம் விசாரித்தது. என்னைத் தனிமை சுகம் விசாரிப்பது இது ஒன்றும் முதல் தடவை இல்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் மனசின் ஏதோ ஒரு மூலையில் வலிக்கத்தான் செய்தது / செய்கிறது. மதுவுடன் எனக்கு அறிமுகம் இருந்தாலும் என்னை அடிமையாக தாரைவார்த்துக்கொடுக்கும் அளவுக்கு நமக்கிடையேயான உறவு பலமடையாததினால், “நான் உன் அடிமை” எனப் பத்திரம் எழுதிக்கொடுத்த தமிழிடம் சரணடைந்தேன். பழகப் பழகப் பால் வேண்டுமானால் புளிக்கலாம், ஆனால், தாய்மொழி, எப்பவுமே புளிக்காது என்பதற்கு நான் என் பெயரை உச்சரித்ததனை விட அதிகமாக வாசித்த புத்தகங்கள் சாட்சி.
தூரத்திலிருந்த தாய்மடியின் நெருக்கத்தினை என் கண்வழி புகுந்த தமிழின் வடிவில் உணர்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கும் போது கலவியின் இடையில் கண் விழித்த குழந்தை போல, அழைப்பு மணி என் தவம் கலைத்தது. தாழ்ப்பாள் விளக்கி புதுமணப்பெண்ணாய் கதவு இடைவெளியில் கண் வைத்துப்பார்த்த போது கைக்கடிகாரத்தின் காத்து திருகியபடி என்னை தற்காலிகமாகத் தத்தெடுத்துள்ள என் வீட்டு உரிமையாளர். விருந்தோம்பல் முடித்து, வந்த காரியம் பற்றி வினாவிய போது, என் தனிமை போக்க என்னை வீட்டுக்கு அழைக்க வந்ததாகச் சொன்ன போது மனது மறுபடியும் பூப்பூத்தது. அவசரக் குளியல் முடித்து, ஆடைமாற்றி அவருக்கு அருகில் ஆறுதலாக அமர்ந்த போது, மோட்டார் வண்டியை முடுக்கியபடி “Marikina City” (என் தற்காலிக புகுந்த வீடு) பரிச்சயமா?” என்று கேட்டதற்கு "இல்லை" என்று நான் அளித்த பதிலிற்கு, அந்த Japan car சுற்றி வந்து முற்றுப்புள்ளி வைத்தது. நகர்வலம் முடித்து வண்டியின் மூச்சு நிறுத்திய போது car யன்னல் வழி தெரிந்த மாளிகை அவர்களின் செல்வச்செழிப்பைச் சொல்லியது. “ஞாயிற்றுக்கிழமைகளில் எங்களது குடும்பம் ஒற்று கூடுவது வழமை” என்று நகர்வலத்தின் போது அவர் சொன்ன ஒரு வரிக் குரலின் அர்த்தம் அங்கு நான் கண்ட காட்சியினால் தெளிவுரை இல்லாமலே விளங்கியது எனக்கு. அறிமுகம் முடித்து, சிற்றுணவு உண்டு, குளிர்களி அருந்தி, ஆன்மிகம், அரசியல், சட்டம், சமூகவியல் எனப் பல விடயங்களை அலசிவிட்டு நன்றி தெரிவித்து மீண்டும் car ஏறி வீடு வந்த போது சூரியன் முகம் கறுத்திருந்தான். இப்போதெல்லாம் சற்று நேரத்துடனேயே தூங்க முடிகிறது. அதற்குக் காரணம் தனிமையா, இல்லை அடிக்கடி மரித்துப்போகும் வலைத்தள இணைப்பா என்று பட்டிமன்றம் வைத்தும் விடைகிடைக்காததை எண்ணிக்கொண்டே தூங்கிபோனேன்.
தனிமைப்பயனத்தின் நான்காவது நாளும் எந்தவித ஆச்சரியங்களோ, அதிர்ச்சிகளோ இல்லாமல் காலை 6 மணிக்கு எல்லாம் ஆரம்பித்தது. புரண்டு படுத்தும் கட்டிலுடனான உறவினைத் தொடர முடியாமல், தற்காலிக விவாகரத்து உடன்படிக்கையுடன் பல் விளக்க ஆயத்தம் செய்த போது கட்டிலில் இருந்த கைத்தொலைபேசி, இல்லாத காதலியை நினைவு படுத்திச் செல்லமாய்ச் சிணுங்கியது. இலத்திரனியல் தாழ்ப்பாள் விலக்கி குறுந்தகவல் (sms) பார்த்த போது, வீட்டுச்சொந்தக்காரரின் வருகை பற்றிய தகவல் தெரிந்தது. சலவை மற்றும் குளியல் முடித்து ஆயத்தமாகவும் “Karan” என்று அவர்கள் அழைக்கவும் நேரம் சரியாக இருந்தது. (“Karan” யார் என்று வியப்பவர்களுக்கு: இப்பொழுதெல்லாம் என்னை இப்படித்தான் அழைக்கிறார்கள்; ஐங்கரன் என்ற என்னுடைய "சட்டப்பெயர்" அளவுக்கதிகமாக நீளமாக இருக்கிறதாம். அதுசரி, தமிழர்கள் வாயிலேயே “யாழ்ப்பாணம்”, “Jaffna” என நாகரிகமாக(!?!?!?) சுருங்கிவிட்ட போது இது ஒரு பொருட்டா?)
என் சௌகரியம் விசாரித்து குறை நிறை கேட்க வந்த அவர்களை வரவேற்று என் பரிந்துரைகளை சொன்னதும், அடுத்த 1 மணி நேரத்துக்குள் என் பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவு செய்த அவர்களை நினைக்கும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை என்னால். வார்த்தைக்கு வார்த்தை என்னை செல்லமாய்ச் சீண்டும் எனது வீட்டு உரிமையாளரும், அவர் சீண்டும் போதெல்லாம் காதலுடன் கட்டுப்படுத்தும் அவர் மனைவியும், எனக்கு இல்லறம் சொல்லித்தந்தார்கள். “தாம்பத்தியம் அப்படி ஒன்றும் மோசமில்லை போல் இருக்கிறதே!” என்று என்னை நினைக்க வைக்கின்ற நொடிகளில் இதுவும் ஒன்று. அவர்கள் விடைபெற்றுச் சென்றபோது கூடவே கலகலப்பும் கிளம்பிச்சென்றதனை உணர முடிந்தது. நேரம் மதியம் கடந்து இரு நாளிகை ஆகிவிட்டிருந்தபோது வயிற்றுக்குள் அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது. சட்டுப்புட்டென்று மாற்றுடை அணிந்துகொண்டு அருகிலிருந்த “Jollibee” இற்கு சென்று “அவசர உணவு” (Fast food) வாங்கி உண்ணத்தொடங்கினேன். திரும்ப வீட்டிற்கு வந்த போது என்னை வரவேற்க தனிமை ஆவலுடன் காத்திருந்தது. இதுக்கு மேல் இந்த நாளைப் பற்றி சொல்லுகின்ற நிகழ்வுகள் எதுவும் இல்லாததனால், வழமையான நடவடிக்கைகளைப் பற்றி இங்கு எழுதி இதை வாசிக்கும் எவரையும் இம்சிக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு அடுத்த நாளுக்குத் தாவுகிறேன்.
எந்தவிதமான ஆச்சரியங்கலையோ, அதிர்ச்சிகளையோ தராமல் கழிந்து போன அடுத்து வந்த மூன்று நாட்களைப்பற்றிப் பேசி / எழுதி என்னுடைய மற்றும் உங்களுடைய நேரம் மற்றும் பொறுமையை வீணடிக்க விரும்பாமல் வந்த கடமையினை ஆரம்பிக்க இருக்கின்ற தினத்தினைப்பற்றி எழுத ஆரம்பிக்கின்றேன்.
காதுகடிக்கும் அலாரத்துக்குக் காத்திருக்காமலே கண் விழித்த எனக்கு, காலையிலேயே இருந்த கடமை, கால்கள் சக்கரம் பூட்டியது. அடுக்களை அருகி, பக்குவமாகப் பரிமாறிய சிசு உணவினை (Cereal) பரிபூரணமாக உண்டு முடித்து, பாத்திரம் கழுவிப் புறப்பட்ட போது நேரம் 9 மணியினைக் கடந்திருந்தது. கால்கடுக்க நடந்து, வியர்வையாலே உடல் மற்றும் உடை நனைத்து, கடிதம் சொன்ன கட்டடம் அடைந்த போது, கால்வாசி நிறைந்திருந்தது மண்டபம். உத்தியோகப்பூர்வப் பதிவு மற்றும் வங்கிக்கடமைகளை முடித்துக்கொண்டு, "நாளையும் சந்திப்போம்" என்று சொல்லி விடை பெற எத்தனித்த போது, மதிய உணவு பற்றிய பிரேரணை மனசை மாற்றியது. மனை திரும்பி கரண்டி பிடிக்கும் அளவுக்கும் பொறுமை எனக்கும், வெறும் பாலபிஷேகம் மட்டும் பெற்ற என் வயிற்றுக்கும் இருக்காததனால், தலை திருப்பி, திசை மாற்றி அவர்கள் கூடவே நடந்ததில், சென்றடைந்தேன், Filipino உணவுகள் மட்டும் பரிமாறப்படும் உணவகம் ஒன்றிற்கு. கூடவே வந்த சக இலங்கை நண்பனின் பரிந்துரைக்கு செவிசாய்த்து, "கடலுணவு கரே கரே" (Seafood Kare Kare) இற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டு நண்பர்களின் கலந்துரையாடலில் சில மட்டுப்படுத்தல்களுடன் (Limitations) கலந்துகொண்டேன். எனக்கும், என்கூடவே கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்களுக்கும் இடையேயான உறவு, விவரிக்கப்பட முடியாத காரணங்களினால் ஊனமுற்றிருந்தது. காதுகளை, வார்த்தைகளுக்கும், மூக்கினை முக்கால்வாசி மறைக்கப்பட்டிருந்த சமையலறைக்கும் தத்தம் செய்துகொடுத்துவிட்டு, பசிபாதி, நெடுக்கம் பாதி எனக்காத்திருந்த போது, நான் எதிர்பார்த்ததனைப் (?!?!) போலவே, அறுசுவைகளில் பலவற்றைத்தொலைத்த பதார்த்தம் பரிமாறப்பட்ட போது, களைப்பினைக் களைந்துவிட்டு நானே சமைத்திருக்கலாம் என்ற எண்ணம், சிலந்தி வலையில் பூச்சியாய்ச் சிக்கிக்கொண்டது. உணவு முடித்து, உரிமையுடன் சுட்ட சூரியனுடன் உரையாடிக்கொண்டே நடந்து, வீடடைந்த போது, வாழ்க்கை மீண்டும் தினசரிக்கடமைகளினால் சிறை எடுக்கப்பட்டது.
வழமையைப் போலவே இன்றைய நாளும் ஆரம்பித்தது. கண் விளித்ததில் இருந்து “கட்டுரை” எழுத ஆரம்பித்தது வரைக்கும் எதுவுமே வழமைக்கு முரணானது இல்லை. நேற்றைக்கு சமைத்த சோறும் முட்டைக்கறியும் குளிர்சாதனப்பெட்டியில் பத்திரமாக இருக்கின்ற மனத்தைரியத்தில் இன்னும் தொல்லை குடுக்க ஆரம்பிக்காத வயிற்றினை மெச்சிக்கொண்டு கதிரையினை இழுத்து உட்கார்ந்த போது நேரம் 9 மணியினைக் கடந்திருந்தது. வரமா இல்லை சாபமா என என்னையே அடிக்கடி ஆச்சரியப்படவும் யோசிக்கவும் வைத்த என்னுடைய வேகம், வழமையைப் போலவே அன்றைக்கும் எனக்கு கைகொடுத்தது. ஏற்கனவே பதிவிறக்கம் (Download) செய்து வைத்திருந்த கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் வாசித்துக் கொண்டு முழுமூச்சாக பேனைக்களத்தில் இறங்கியபோது நான் வாசித்து அறிந்துகொண்ட விஷயங்கள் என்னை விரக்தியின் உச்சிக்கு கொண்டுசென்றன. என் விரக்திக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இலங்கையில் Domestic Violence பற்றி நான் அறிந்துகொண்ட விபரங்கள். இன்னொன்று, என்னுடைய நாட்டைப்பற்றிய என்னுடைய சிற்றறிவு. விரக்தியிலிருந்து விடுபடாமலே விரல்களை முடுக்கியதில் ஏறத்தாள இரண்டாயிரம் வார்த்தைக் குஞ்சுகளை வெறும் மூன்றே மணி நேரத்தில் பிரசவிக்க முடிந்தது. இணைய இணைப்பு இல்லாததனால், கட்டுரையினைக் கைக்கடக்கமான (உண்மையைச் சொன்னால், விரலுக்கு அடக்கமான) Flash drive இல் பதிவு செய்து, இணைய இணைப்பினைத் தேடியடைந்த போது இன்னொரு ஐந்து நிமிடங்கள் தற்கொலை செய்திருந்தது.
வீடு திரும்பி, வியர்வை கழுவிய போது, வயிற்றுக்குள் அலாரம் அடித்தது. குளிர் விலக்கி, சூடு கொடுத்து, எவ்வளவு முயன்றும் நாவுடன் சமரசம் செய்யாத சுவையைக்கொண்டிருந்த முட்டைக்கறியினை சோற்றுடன் பிசைந்து அருந்திய போது, சுவையை விட வயிற்றுப்பசி தான் முக்கியம் என்ற ஞானம் பிறந்தது. கும்பி நிறைத்து, சற்றே களைப்பாறிய போது, சலவைக்குக் காத்திருந்த ஆடைகள் கையசைத்தது கண்ணில் பட்டது. சட்டுப்புட்டென்று சலவை முடித்து, அடுக்களையில் கவிழ்ந்து கிடந்த பாத்திரங்கள் துலக்கி ஒரு பக்கமாக வைத்து, பிரமச்சரிய வாழ்க்கைக்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முயற்சியின் அடுத்த பாகத்தையும் முடித்தேன். இன்னும் ஒரு மணித்தியாலத்தில் ஆரம்பிக்க இருந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்வதற்காக என்னைத் தயார்படுத்திகொண்டு, பல்கலைக்கழகம் அடைந்து, குறித்த மண்டபத்தினைத் தேடி அலைந்தபோது, கண்ணில் பட்ட என் சகபாடிகள், என் காலில் தடுக்கிய சாலைவரைபடம். கூடவே நடந்து கூரைத்தளத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலினை அடைந்த போது, கதிரவன் களைத்துப்போயிருந்தான்.
அடுத்த சில மணித்துளிகள் மகிழ்ச்சியுடன் கழிந்தது. உணவும் சிரிப்பும் பஞ்சமின்றிக்கிடைத்தது அந்த ஒன்றுகூடலில். அடுத்த கல்வி ஆண்டில் இணைந்திருந்த மாணவர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டு, அனுபவங்களைப் பகிர்ந்து முடித்து, பிரியாவிடை பெற எத்தனித்த போது, beer அருந்துவது பற்றிய பிரேரணை முன்வைக்கப்பட்டது. செவிவழி புகுந்த செய்தி என் கால்களினை அடைந்ததனால் எடை அதிகரித்துப்போன என் கால்கள், நகர்வதை நிறுத்தி "பிரேரணை முடிவினை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கியது. பிரேரணை நிறைவேற்றப்பட்டதுடன், நகர ஆரம்பித்த நாம், கூப்பிடு தூரத்தில் அமைந்திருந்த, பளிங்குக் Coffee Shop இனுள் புகுந்து "விருப்பம்" அறிவித்து, அரட்டை அரங்கம் ஆரம்பித்த போது, Beer இன் தேவை, கடலில் விழுந்த மழைத்துளியாய்க் காணாமல் போனது. குரல்வளையும், கடிகார முள்ளும் களைத்துப்போனதைக் கூடப் பொருட்படுத்தாது, மந்தியாய்த் தாவிய தலைப்புக்களை அலசி ஆராய்ந்து முடித்து விடை பெற்றதோடு முடிவடைந்தது அன்றைய "வழமைக்குள்" சிக்காத வாழ்க்கை.
Manila விற்கு வந்ததற்கு அலாரமடித்துக் கண்விழித்தது இன்றுதான் முதற்தடவை. நேற்றையமாலை, அலைச்சலில் முடிந்ததும், நேரம் பிந்திய தூக்கமும் காரணமாக இருக்கலாம். அதைப்பற்றி யோசிப்பதற்கு இடம் கொடுக்காமல் பல்கலைக்கழகம் போவதற்கு முன்னர் முடிக்க வேண்டிய கடமைகளின் பட்டியல் என்னைத் துரத்தியது. கண்களைக் கசக்கியபடி இடறிய கால்களினை சமாளித்தபடி குளியலறை அடைந்து “கடமைகள்” முடித்து, காலைத்தேநீர் தயாரிக்க ஆரம்பித்தபோது, சலவைக்குக் காத்திருந்த ஆடைகள் சத்தமின்றிச்சிரித்தன. தேநீர்ச்சபையினை சற்று ஒத்திவைத்துவிட்டு சாலை மாற்றி சலவைக்குள் புகுந்து வெளியேறியபோது “அப்பாடா” என்றிருந்தது. Manila வில் தேடிப்பிடித்து வாங்கிய “Ceylon Tea” இனை அருந்தி முடித்து விட்டு சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்த போது, கடந்த வாரம் எதற்கும் இருக்கட்டும் என வாங்கி வைத்த Cereal இன் நினைவு வந்தது. சட்டென்று சரை பிரித்து, “குளிர்”காய்ந்து கொண்டிருந்த பாலினுள் முக்கி எடுத்து உண்ட போது, மனதில் வந்து போன “விக்னா” கோழிக்கொத்து என்னைக் கண்ணீர் இல்லாமல் அழச்சொல்லியது. உண்டு முடித்த பாத்திரத்துடன், விக்னா கோழிக்கொத்தின் நினைப்பையும் சேர்த்துக் கழுவி விட்டு, கால்களில் சப்பாத்து மாட்டி புறப்பட்ட போது, அந்த நீலக்காற்சட்டைப் பருவம் நினைவுக்கு வந்து நெஞ்சில் கிச்சுக்கிச்சு மூட்டியது.
சனிக்கிழமை இரவு அறிமுகப்படுத்தப்பட்ட குறுக்கு வழியே இந்த பரந்துபட்ட பல்கலைக்கழகத்தில் குறித்த வகுப்பறையை எங்கே போய்த்தேடுவது என்று யோசித்தபடியே நடந்த போது, பாதி வழியிலேயே காலை வணக்கம் சொன்ன சகமாணவிகள், காந்தம் இல்லாத திசைகாட்டியாகத் தெரிந்தார்கள். “Manila வாழ்க்கை” பற்றிப் பேசியபடியே வகுப்பறை அடைந்த போது மழை இல்லாமலேயே நனைந்திருந்தேன். பேராசிரியர் Plato போல் இருக்கிறார் என்று சக மாணவி ஒருத்தி கொடுத்த முன்னுரையுடன், மிகச்சுருக்கமான "மாணவர்" அறிமுகத்தினை முடித்துக்கொண்டு, அண்டம் வெல்ல அறிவாயுதம் ஏந்த ஆரம்பித்தோம். ஏட்டறிவை, அவருடைய முப்பது வருட பட்டறிவு பண்படுத்தியிருந்தமை என் நகக்கண்ணுக்கும் புலனாகியது. மூச்சிரைக்க ஓடிய கடிகாரம் மூன்றுமணி நேர முடிவுக்கோட்டைத் தொட்ட போது அதுவரை, அறிவியலால் நிரம்பியிருந்த வகுப்பறை, அறிவிப்பு மணி ஒலியால் நிறையத்தொடங்கியது. இரைப்பை நிறைப்பதற்காக அவசரமாக மூடிய, பயணப்பை zip இன் இடையில் சிக்கிக்கதறிய, தண்ணீர்ப்போத்தலினை சமாதானம் செய்தபடியே, குறுக்குவழி நடந்து, கூடுபுகுந்தபோது, குளிர்சாதனப்பெட்டியில் இறக்கையும் அலகும் இன்றி ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கோழி என்னைச் சண்டைக்கு அழைத்தது. ஆடை மாற்றி, ஆயுதம் தூக்கி ஆடுகளம் புகுந்ததுடன் அன்றைய நாளின், "வழமை" முத்திரை பொறிக்கப்படாத நிகழ்வுகளின் இருப்பு (Stock) முடிந்தது.
அன்றாட வகுப்புக்களும், அடிக்கடி வந்து வந்து போன நினைவுகளும் என வார்த்தை வடிவம் கொடுப்பதற்கு முக்கியமில்லாத பொழுதுகளாகக் கழிந்து போனது மேற்கூறிய நாட்கள். அசாதாரணங்களினால் என் நண்பர்களைப்போல குறைவான எண்ணிக்கையுடனும், சாதாரணங்களினால் என் எதிரிகளைப்போல அதிகமான எண்ணிக்கையுடனும் கழிந்த இந்த நான்கு நாட்களுக்காய் சில இலத்திரனியல் பக்கங்களை வீணடிக்க விரும்பாது, அடுத்த பொழுதை வரவேற்கத் தயாரானேன்.
மறுநாள் செல்ல வேண்டிய field trip தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் அதற்கு முன்னர் முடிக்க வேண்டிய assignment என ஆர்ப்பாட்டமில்லாது கழிந்து போன இன்றைய நாளை அவசரமாகக் கிழித்து எறிந்துவிட்டு, பல அனுபவங்களையும், சில அறிமுகங்களையும் ஒளித்துவைத்திருந்த அடுத்த வாரத்தினை வரவேற்கத் தயாரானேன்.
சுதேசிகளுடன் ஒரு வாரம்
அதிகாலை 4 மணிக்கெல்லாம் வாசற்படி வருவதாக வாக்களித்த van இனையும் கூடவே பிரயாணிக்கவிருந்த நண்பர்களையும் காக்க வைக்க விரும்பாது, 3 மணிக்கெல்லாம்ஆரம்பித்த நாளை தூங்காமலேவரவேற்றேன். Katipunan இல் அமைந்திருந்த Mc Donald's இல் காத்திருந்த மற்றவர்களுடன் இணைந்து விமானநிலையம் நோக்கி தார்ச்சாலையில் van உம் நினைவுச்சாலையில் மனமும் வழுக்க ஆரம்பித்தன. அடுத்த ஏழு நாட்களும் தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களையும் அனுபவங்களையும் ஒன்று விடாமல் அள்ளித்திணித்துக்கொள்ளும் அவாவுடன், இந்த எந்திர வாழ்க்கை, அடிமடி தொடங்கி அண்ணம் வரைக்கும் நிறைத்து வைத்திருந்த அநாவசியங்களை, பஞ்சாயத்தினை கூட்டாமலே ஊரை (மனதை) விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்த போது Ninoy Aquino International Airport, Manila என்று சிவப்பு நிறத்தில் கண்சிமிட்டிய அறிவிப்புப்பலகை கண்ணில் பட்டது.
அடுத்து வந்த சில மணித்துளிகளை காத்திருப்பதிலும் காகிதக்கடமைகள் முடிப்பதிலும் தொலைத்துவிட்டு அந்த Wright சகோதரர்களின் கண்டுபிடிப்பின் உதவியுடன் 7107 தீவுக்கூட்டங்களில் அழகானதும் ஆபத்தானதுமான Mindanao இன் தரை தொட்ட போது நேரம் காலை 9 மணி ஆகி இருந்தது. எமக்கு முன்னராகவே வந்து காத்திருந்த Jeepney அடுத்த ஐந்து மணி நேரப்பயணத்தின் "சௌகரியம்" சொல்லியது. 'அந்தக்குட்டை வாகனத்தில் ஐந்து மணித்தியாலம்' பற்றி ஒரு விளக்கம் மற்றும் அவசரத்தேவைகளை முடித்துக்கொண்டு ஆரம்பித்தோம் நிஜத்தினை நோக்கிய அந்தப் பயணத்தினை. பணிவினைக் கற்றுத்தரும் வகையில் குட்டையாக அமைந்திருந்த அந்தப் பலவர்ண வாகனத்தினுள் அமராது அந்தப் பச்சைப்பாலைவனம் பாகுபாடு இன்றி வாரி இறைத்த கந்தகம் கலக்காத காற்றை கூடவே தொங்கல் சவாரி செய்த நண்பர்களுடன் ஆசை தீர சுவாசித்துக்கொண்டே பயணித்த அந்த மணித்துளிகள் என் அரைக்காற்சட்டைப் பருவத்தை நினைவுபடுத்திச்சென்றது.

இரண்டு இரண்டரை மணித்தியாலங்களில் மதிய உணவுக்காக Malaybalay town இல் அமைந்திருந்த Amadeo Restaurant இல் குட்டைவண்டி நிறுத்தப்பட்ட போது உடம்பின் அத்தனை மூட்டுக்களிலும் வலி தெரிந்தது. ருசி மறக்கும் அளவுக்குப் பசியா இல்லை உண்மையிலேயே சுவையான உணவா எனப் பட்டிமன்றம் வைக்க அனுமதி தராது பசி என்னைத் துரத்தியது. பக்குவமாய் வரிசையில் நின்று எனக்கான முறைக்காக காத்திருந்த போது காதல் பரவாயில்லை என்று தோன்றியது. சட்டியில் கிடந்தவற்றில் எனது சுவையரும்புகளுடன் ஒட்டி உறவாடக்கூடியவற்றை மட்டும்
தேடி எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்த போது சொர்க்கம் தட்டில் தெரிந்தது.
உண்ட உணவு இரைப்பைத் தரையில் சௌகரியமாக அமர முன்னரே "let's go" என்று சொன்ன Nabil ஐ எரிக்க நெற்றிக்கண் இல்லாது போனதற்காக முதற்தடவையாகக் கவலைப்பட்டேன். விதியை நொந்துகொண்டே தொங்க ஆயத்தமான போது, குட்டைவண்டியின் கூரையில் இருந்து பயணம் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்ட போது மறுக்க முடியவில்லை என்னால். ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்த கூரைப்பயணம் நேரம் செல்லச்செல்ல சொர்க்கமாய் மாறவில்லை என்றாலும் நரகமாய் இருக்கவில்லை. ஏழை வீட்டு தங்கமாலையாய் நலிந்து போயிருந்த அந்தப் பாதையின் இரு மருங்கிலும் பசும்புற்களும் பெரும் மரங்களும், மழை நனைத்த தம் சடை உலர்த்திக்கொண்டிருந்தன. காதுகளைக் கற்பழித்துக்கொண்டிருந்த நாகரிக சப்தங்கள் மெல்லமெல்ல அடங்கிப்போகத் தொடங்கியது. காற்றின் பாட்டுக்கு கிளைகளின் கரவோசையும், நின்றுகொண்டே தூங்கும் மரங்களுக்கு விடாது காதல் சொல்லும் பட்சிகளும் என்று பார்க்குமிடமெல்லாம் மனிதனால் அனாவசியம் என நாடு கடத்தப்பட்ட வாழ்க்கை. நகர்வதற்காக உறுமிக்கொண்டிருந்த எங்களுடைய குட்டை வண்டி, குதித்து விளையாடிய அணில்களையும் கூடவே பாடிய பட்சிகளையும் அவசியமின்றி அச்சுறுத்திய போதும்அவற்றின் குதூகலத்தில் ஏதும் குறை ஏற்பட்டதாகத் தோன்றவில்லை எனக்கு. Oxygen தொலைத்த வாழ்க்கையில், இலவசமாகச் சேகரித்த கார்பன் துகள்களினால் சுயநல மனங்களை விட அதிகமாகக் கருத்திருந்த காற்றுப்பையின் ஒவ்வொரு கலமும் கன்னிமை கழியாத காற்றின் ஸ்பரிசத்தால் கலவி இல்லாமலே கற்பம் தரித்தன. அந்தக் குட்டை வாகனத்தின் மொட்டைமாடியின் மேல், தவம் ஏதும் செய்யாமலே, வாழும் போதே சொர்க்கம் காணும் வரம் கிடைத்தது எனக்கு.

மனித மனமாய் அடிக்கடி தடுமாறிய வாகனம் சில காலக்கணக்குகளைக் கடந்துவந்த களைப்பில் சற்று அளவுக்கதிகமாகவே மூச்சிரைத்தது . பலகோடி உயிர்களின் வாழ்க்கையில் ஒரு நாளைக் கொன்றுவிட்ட கவலையை, வானம் கருப்பாடை கட்டி அனுஷ்டிக்க ஆரம்பிக்க ஆயத்தம் செய்யவும் சக்கரம் கடுக்க ஓடிவந்த வண்டி தங்குமிடம் சேரவும் நேரப்பொருத்தம் சரியாக இருந்தது. மொட்டைமாடி மூட்டைகளை பக்குவமாய் இறக்கி அவரவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிடம் அடைந்து தலைக்கனத்தினைத் தவிர மற்ற அனைத்துக் கனங்களையும் இறக்கிவைத்து சற்றே இளைப்பாறிய போது ஒன்றுகூடலுக்கான நேரம் அறிவிக்கப்பட்டது. அவசர அவசரமாக, உடுத்திப்போன நூலாடையையும் ஒட்டிப்பிறந்த தோலாடையையும் பொதுக்குளியலறையில் கழுவிமுடித்து மண்டபம் அடைந்த போது சில ஏற்கனவே அறிமுகமான முகங்களையும் பல புதுமுகங்களையும் பார்க்க முடிந்தது. அடுத்து வர இருக்கும் 6 நாட்கள், குறித்த கற்றல் நிகழ்வு தொடர்பில் எவ்வாறு திட்டமிடப்பட்டிருகிறது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து பரிமாறப்பட்ட சமபந்தி இராப்போசனத்தினை முடித்துக்கொண்டு உறங்கலறை அடைந்தேன்.
பூமி முகம் திருப்பியதும் காட்டின் நடுவில் உள்ள ஆற்றுக்குச் செல்லலாம் என்ற நினைவு என் ஏழாம் அறிவினைச் சீண்டி உடம்பு அசதியினையும் தாண்டி என்னைக் கண் விழிக்க வைத்தது. சீமேந்துச் சுவர்களுக்குள் திசைதிருப்பப்பட்டிருந்த அருவித்தண்ணீரில் உடல் நனைத்த போது மனமும் சேர்ந்து நனைந்தது. வரிசையிலேகாத்திருந்து காத்திருந்து காலைக்கடன் முடித்தது யாழ்ப்பாணத் தமிழனுக்கு மிகவும் பழக்கப்பட்டுப்போன இடம்பெயர்வுகளையும் என் சாரணிய வாழ்க்கையையும் நினைவுபடுத்திச் சென்றது. காலை உணவு முடித்து, சக சாகசக்காரர்களுடன் இணைந்த போது சூரியனின் கதிர்க்கரங்கள் காட்டுப்பெண்ணின் தாவணி தாண்ட கடும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தன. தேர்தல் நாட்களில் மாத்திரம் தேசத்தந்தைகளாக மாறும் அரசியல்வாதிகள் இந்த ஊரிலும் இருக்கிறார்கள் என்பது மழலைச் சித்திரமாகக் கிடந்த "வீதியைப் " பார்த்ததும் புரிந்தது. சற்றே விசாரித்ததில், மூதாட்டியின் முகச்சுருக்கமாக இருந்த சகதிச் சாலை "சர்க்கார்" போட்டதல்ல, கள்ளமரம் வெட்டிக் காற்றில் கரியமிலவாயு சேர்க்கும் கயவர்கள் தங்கள் சௌகரியத்துக்காக உருவாக்கிக்கொண்டது என்று தெரியவந்தது. ஆரம்பத்தில் சக்தி பட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே கரிசனமாக இருந்தது. கால ஓட்டத்தில், சறுக்கி விழாமல் இருப்பதே சாத்தியமில்லை என்பது புரிந்தது. கடும் தரையை எதிர்பார்த்து அணிந்த இறப்பர் செருப்பு, காதலின் நினைவால் வாடும் காதலர் மனது போல இளகிக்கிடந்த தரையுடன் மோதித்தோற்றதில் காலில் இருந்து கைக்கு மாறிக் கடைசியில் கரையோரமாக நின்ற மரத்திடம் அடைக்கலம் புகுந்தது.
முதலடி எடுத்து வைக்கும் குழந்தை போல தட்டுத் தடுமாறியும், மணமேடை புகும் மணப்பெண்ணாக குனிந்த தலை நிமிராமலும் நடந்தும் முழுதாகப் பத்து அடி கூட வைக்கமுடியவில்லை பிரதட்சணம் பண்ணாமல்.
சில மணித்துளிகளை சகதியுடன் சமாதியாக்கி நடந்ததில் தூரத்தில் கேட்டது எரிபொருள் இல்லாமலே எப்போதும் (???) [வற்றாமல்] ஓடும் அந்த வெள்ளி ரயிலின் சலசலப்பு. பார்த்ததும் பத்தும் காதலைப்போல சட்டென்று தொற்றிக்கொண்ட உற்சாகம். பற்றைகள் விலக்கி பக்குவமாய் நடந்து ஜலதரிசனம் கண்டபோது இந்தப் போலி வாழ்க்கையால் இன்னும் உருக்குளைக்கப்படாத என் பிள்ளை உள்ளம் என்னைச் சட்டென்று சுகம் விசாரித்தது. ஆற்றையும் அம்புலியைப் போலவே அருகிலிருந்து பார்ப்பதற்கு என் புலன்கள் ஒன்றும் புலம் பெயர்ந்துவிடவில்லை. வெளிநடப்புச் செய்த சகபாடிகளை சட்டை செய்யாமல் மேலாடை துறந்து மெதுவாக அந்தத் தெள்ளிய நீரில் கால்கள் நனைத்தபோது எப்பொழுதோ கிடைத்த முதல் முத்தம் மீண்டும் கிடைத்த உணர்வு. சில்லென்ற அந்தச் சில்லென்ற நீர்த்துளிகள் என் தோலாடை துளைத்து உயிர் நனைத்தபோது புலன்கள் எல்லாம் மறுபிறவி எடுத்தன.

ஜலசமாதி அடையப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்த போது டமாரம் இல்லாமல் நேரம் அறிவிக்கப்பட்டது. புது மனைவியைப் பிரிவதுகூட அந்தளவுக்கு இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு இப்போதும் இருக்கிறது. இல்லாத தொப்புள்கொடியை நேரக்கத்தியால் துண்டித்துக்கொண்டு வந்தவழி பார்த்து நடந்த போது என் உடல் அணைத்திருந்த / நனைத்திருந்த தண்ணீர்த்துளிகளோடு என் இறுகிய மனத்தோடு முட்டிமோதிய மகிழ்ச்சி நொடிகளும் காற்றோடு கலக்கத் தொடங்கியது. நிலா மேல் நிறையாக எடை குறைந்திருந்த நான் வருந்திச் சுமக்கின்ற வேண்டாத வம்புகள் என் நிழலிலும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டன. இன்னும் நெருங்காத முதுமையையும் நினைத்து நினைத்து ஏங்கும் மழலைப்பருவத்தையும் நினைவுபடுத்திய பாதைக்கு நன்றி சொல்லிக்கொண்டே நடந்ததில் பசிவயிறு பண்பாக ஒத்துழைத்தது. பள்ளம் தேடி ஓடும் நீராக தங்குமிடம் விரைந்து இளைப்பு மற்றும் பசியாறி மாலை நிகழ்ச்சிகளுக்குத் தயாரானோம். கலந்துரையாடல் கருத்துக்கணிப்பு என்று உப்பில்லாப் பண்டமாய் ருசி மரித்துப்போன நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்லி உங்களுக்கு அஜீரணத்தை ஏற்படுத்த விரும்பாததால் அந்த சமுதாயத்திற்கே நீர்வார்த்துக்கொண்டிருந்த அந்த அருவியில் நீராட உங்களை(யும்) அழைத்துச் செல்கிறேன். ஒரே நிமிடத்திலும் சில வார்த்தைகளிலும் சொல்லிவிடுமளவுக்கு சுலபமாக அமையவில்லை எமது அ(ருவி )டுத்த நாள்.
தலைவகிடாக நீண்டிருந்த ஒற்றையடிப் பாதையில்(???) ஒருவருக்குப் பின் ஒருவராக நடந்ததில் எறும்புகள் கற்றுக்கொடுத்த ஒழுக்கம் தெரிந்தது இருபதுகளிலேயே எம்மை முதுமையாக்கிப் பணிவு சொல்லிக்கொடுத்த பாதையில் "பள்ளிக்கட்டுச் சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சாமியே ஐயப்பா " என்று மனசுக்குள்ளே பாடிக்கொண்டே பத்து வருட நகர வாழ்க்கையால் மென்மையடைந்திருந்த பாதங்கள் கொடுத்த வலியை மறைத்துக்கொண்டு நடந்ததில் வளர்ந்திருந்த புற்கள்(???) நிறை(த்)ந்திருந்த பூமியை அடைந்தோம். தற்காலிக வனவாசிகளாக எம்மை மாற்றிக்கொள்ள நாம் எவ்வளவோ முயற்சித்த போதும் சந்தோசம் தொலைத்து சௌகரியம் வாங்கிய வாழ்க்கை எம்மை அடிமைப்படுத்தியிருந்தமை நாம் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தெரிந்தது. இலங்கைத் திறைசேரியாக குறைந்துகொண்டிருந்த திரணியை ஒன்று திரட்டி மூச்சு முட்ட நடந்ததில் ஏழ்மையிலும் விருந்தோம்பல் மறக்காத யாழ், தென்மராட்சி மக்களாக விசாலத்தில் குறைந்திருந்தாலும் தாகம் தணிக்க நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த அந்த ஒற்றை அருவி கண்ணில் பட்டது.

தாய்மடி தேடி ஓடும் குழந்தையாக அருவி நீரில் கால் நனைத்த போது கர்ப்பகால
எனக்கான நாளைய பொழுதும் விடியும்...

Comments
Post a Comment